சென்னை மாநகராட்சி சாலை மற்றும் தெரு பெயர்ப் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டிய 340 பேர் மீது, மாநகராட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில், திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத் தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சிக் கட்டிடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, மாநகரின் அழகு சீர்குலைக்கப்படுகிறது.
தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டப்படி, நகரின் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டவோ, அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை அமைக்கவோ கூடாது. அதன் அடிப்படையில், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மாநகராட்சிப் பணியாளர்களால் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுவரொட்டிகள் ஒட்டுவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த ஜன. 11-ம் தேதி முதல் பிப்.1-ம் தேதி வரை, மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் சுவரொட்டி ஒட்டிய 340 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சென்னை மாநகரில் பொது இடங்கள் மற்றும் தெரு, சாலை பெயர்ப் பலகைகள், இதர அறிவிப்புப் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டுவோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.