திமுக கிளை செயலாளர் மீது புகார் அளித்தும் ஏன் வழக்கு பதியவில்லை – பெண் கவுன்சிலர் கேள்வி

தனது புகைப்படத்தை தவறாக சித்தரித்து பொதுமக்கள் மத்தியில் பரப்பிய திமுக கிளை செயலாளர் மீது காவல்துறையில் புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வார்டு உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை ஊராட்சியில் 3 வது வார்டு உறுப்பினராக இருப்பவர் பவுசியா. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இவருக்கு கணவர் இல்லாத காரணத்தால் 100 நாள் வேலை திட்டத்திலும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய போது, உடல்நிலை சரியில்லாமல் சிறிது நேரம் அதே பகுதியில் உறங்கி இருக்கிறார். அப்போது 100 நாள் பணியின் மேற்பார்வையாளராக உள்ள செல்வி என்பவர் அதை புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது.
image
இதையடுத்து கடந்த 26 ஆம் தேதி அப்பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது, 100 நாள் திட்டத்தின் மேற்பார்வையாளர் செல்வி என்பவர் மீது உள்ள முறைகேடுகள் குறித்து கவுன்சிலர் பவுசியா குற்றச்சாட்டு முன்வைத்து பேசி இருக்கிறார். அப்போது கூட்டத்திற்கு வந்த 100 நாள் வேலை திட்டத்தில் மேற்பார்வையாளரின் கணவரும், அப்பகுதியின் திமுக கிளை செயலாளருமான தயானந்தன் என்பவர், கவுன்சிலர் பவுசியாவின் பல்வேறு புகைப்படங்களை பிரின்ட் போட்டு அதை கிராம சபை கூட்டத்தில் இருந்தவர்களிடம் கொடுத்திருக்கிறார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பவுசியா பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட தனது புகைப்படங்களை கைப்பற்றி நெலாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று முன்தினம் 05.02.2023 சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குச் சென்று கேட்டுள்ளார். அப்போது, இந்த குற்றச்சாட்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அளவிற்கு முகாந்திரம் இல்லை என காவல்துறையினர் கூறிவிட்டதாகவும் பவுசியா கூறினார்.
image
கணவனை இழந்து குழந்தைகளோடு வாழும் ஒரு பெண்ணுடைய புகைப்படத்தை தவறாக சித்தரித்து பொதுமக்கள் மத்தியில் வெளியிட்ட நபர் மீது ஏன் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் எனவும் கேள்வி எழுப்பிய பவுசியா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கவுன்சிலர் ஆக இருக்கும் எனக்கே இந்த நிலைமை என்றால், மற்றவர்களின் நிலை என்ன எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜிடம் கேட்டபோது, காவலர் தேர்வு பணிக்காக வெளியூரில் இருப்பதாகவும், 10 தேதி வந்து இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.