புதுடெல்லி: உச்ச நீதிமன்ற மூத்த வழக் கறிஞர் அஷ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “மோசடியாக நடைபெறும் மதமாற்றத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் பல்வேறு மாநில அரசுகளின் மதமாற்ற தடை சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மதமாற்ற தடை சட்டத்தை நான் ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. என்னுடைய மனு இதில் இருந்து வேறுபட்டது. இதை தனியாக விசாரிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறும்போது, “மதமாற்றம் தொடர்பான அனைத்து மனுக்களும் இப்போதைக்கு ஒன்றாக விசாரிக்கப்படும். மார்ச் 17-ம் தேதி இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெறும்” என்றார்.
உ.பி. உட்பட 7 மாநில அரசுகள் மதமாற்ற தடை சட்டத்தை இயற்றி உள்ளன. இந்த சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிலர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்கள் குறித்துபதில் அளிக்க 7 மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப் பட்டது.