உயிருக்கு ஆபத்தான நோய்களை முன்கூட்டியே கண்டறிதல்: மத்திய அரசு தகவல்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்தவகையில், உயிருக்கு ஆபத்தான நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நோய்களை முன்கூட்டியே கண்டறிதல்

“தேசிய சுகாதார இயக்கத்தின், ஒரு பகுதியாக, புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள், பக்கவாத தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்குகிறது. இத்திட்டமானது, உள்கட்டமைப்பு, மனித வள மேம்பாடு, சுகாதார மேம்பாடு, விழிப்புணர்வு உருவாக்கம், ஸ்கிரீனிங், ஆரம்பகால நோயறிதல், மேலாண்மை, புற்றுநோய் உட்பட தொற்றாத நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சரியான அளவிலான சுகாதார வசதிகளை பரிந்துரைப்பதில் கவனம் செலுத்துகிறது. புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள், பக்கவாத தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ், 707 மாவட்ட சுகாதார மருத்துவ மையங்கள், 193 மாவட்ட இதய சிகிச்சை பிரிவுகள், 268 பகல்நேர பராமரிப்பு மையங்கள்,5541 சமூக சுகாதார மையப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பொதுவான புற்றுநோய்களுக்கான தடுப்பு, நோய்க் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துதல் மக்கள்தொகை அடிப்படையிலான முன்முயற்சி தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், விரிவான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பின் ஒரு பகுதியாக நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இம்முயற்சியின் கீழ், 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், வாய்வழி, மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் ஆகிய மூன்று பொதுவான புற்றுநோய்களுக்கான ஸ்கிரீனிங்கிற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இந்த பொதுவான புற்றுநோய்களை பரிசோதிப்பது ஆயுஷ்மான் பாரத் – உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் கீழ் சேவை வழங்கலின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

ஜனவரி 30, 2023 நிலவரப்படி, 1,56,332 ஆரோக்கிய மையங்கள் செயல்பட்டன, இதில் 1,25,602 துணை சுகாதார நிலைய அளவிலான மையங்களாகும். 23,512 ஆயுஷ்மான் பாரத் ஆரம்ப சுகாதார நிலையங்கள் .7,218 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்.” என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் மாநிலங்களையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகள்

“தேசிய மருத்துவ ஆணையத்தின், அறிக்கையின்படி, நாட்டில் தற்போது 358 அரசு மற்றும் 296 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தற்போதுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத, பின்தங்கிய பகுதிகள் மற்றும் ஆர்வமுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, ‘தற்போதுள்ள மாவட்ட/பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான’ மத்திய நிதியுதவி திட்டத்தை நிர்வகிக்கிறது. இத்திட்டத்தின் கீழ், வடகிழக்கு மற்றும் சிறப்பு வகை மாநிலங்களுக்கு 90:10, பிற மாநிலங்களுக்கு 60:40 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதிப் பகிர்வுடன் மொத்தம் 157 மருத்துவக் கல்லூரிகள் மூன்று கட்டங்களாக அனுமதிக்கப்பட்டுள்ளன.

எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துவம்) இடங்கள் மற்றும் பி.ஜி (முதுநிலை மருத்துவம்) இடங்களை அதிகரிப்பதற்காகவும் தற்போதுள்ள மாநில அரசு/மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதற்காகவும் மத்திய அரசு வழங்கும் திட்டங்களின் கீழ் சிவில் வேலைகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு தற்போதுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதியுதவி வழங்குகிறது. இந்தத் திட்டங்களின் கீழ், 77 கல்லூரிகளில் 4677 எம்பிபிஎஸ் இடங்களும், 72 கல்லூரிகளில் முதல் கட்டத்தில் 4058 முதுநிலை இடங்களும், நாட்டிலுள்ள 60 கல்லூரிகளில் இரண்டாம் கட்டத்தில் 3858 பிஜி இடங்களும் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் நிலை சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நாட்டில் மொத்தம் 75 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.” என என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.