அமமுக யாருக்கும் ஆதரவளிக்கவில்லை: டிடிவி தினகரன் திட்டவட்டம்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக சார்பாக ஹரிபிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திமுகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய போது அது நல்ல முடிவு என்று வரவேற்று பேசினார் டிடிவி தினகரன். ஆனால் இபிஎஸ் தலைமையிலான வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது. பாஜக தனது ஆதரவை அதிமுகவுக்கு வழங்கியது.

இதுஒருபுறமிருக்க குக்கர் சின்னம் கிடைக்காததால் நேற்று அமமுக போட்டியிடவில்லை என்று டிடிவி தினகரன் அறிவித்தார்.

இது தொடர்பாக இன்று (பிப்ரவரி 8 ) செய்தியாளர்களைச் சந்தித்தார் டி டி வி தினகரன். அப்போது பேசிய அவர், “2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட அமமுகவிற்கு எந்தவித தடையும் இல்லை. குக்கர் சின்னம் கிடைப்பதிலும் எந்த வித தடையும் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் பல சின்னங்களில் எங்களின் வேட்பாளர்கள் நின்றார்கள்.

நேற்று (பிப்ரவரி 7) மதியம் 1 மணிக்கு தான் சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் உத்தரவு வந்தது. சுயேட்சை சின்னத்தில் போட்டியிடலாம் அல்லது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் எந்தவித குழப்பமும் வேண்டாம் என்பதால் நிர்வாகிகளுடன் பேசி இந்த முடிவை எடுத்து அறிவித்தேன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் எப்போதும் இல்லை. எல்லாரும் ஓர் அணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கூறி வருகிறேன். ஒரே கட்சியில் இல்லை. திமுகவை வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒரே அணியில் இணைய வேண்டும்.

இரட்டை இலை தவறானவர்கள் கையில் உள்ளது. அதை வைத்து அவர்கள் வெற்றி பெற முடியாது. அவர்களுக்கும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை கிடையாது.
திமுக
கூட்டணியை ஆதரிக்க மாட்டோம். அதிமுக கூட்டணியையும் ஆதரிக்க மாட்டோம். தீய சக்திகளையும் ஆதரிக்க மாட்டோம். துரோக சக்திகளையும் ஆதரிக்க மாட்டோம். இவர்களை எதிர்த்து தான் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது” என்று டிடிவி தினகரன் கூறினார்.

வேட்பாளரை அறிவித்து குக்கர் சின்னத்தை ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுகவினர் பிரபலப்படுத்திக் கொண்டிருந்த போது சின்னம் கிடைக்காத சூழல் ஏற்பட்டதால் இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று முடிவெடுக்க டிடிவி தினகரன் தள்ளப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.