திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகிலுள்ள ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் பீகாரைச் சேர்ந்த குட்டுலு என்ற இளைஞர் வசித்துவருகிறார். இவர் அருகிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்தப் பணியாளராக வேலைபார்த்து வருகிறார். இதே தொழிற்சாலையில் அஸ்ஸாமைச் சேர்ந்த துவர்க்காபார் என்பவரும் வேலைபார்த்து வந்திருக்கிறார். இருவரும் ஒரே தொழிற்சாலையில் பணியாற்றுவதால் நட்பாகப் பழகிவந்திருக்கிறார்கள்.
துவர்க்காபார் சோழவரம் அருகிலுள்ள இருளிப்பட்டு பகுதியில் தன்னுடைய மனைவி சோனா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), இரண்டு குழந்தைகளுடன் வசித்துவந்தார். இந்த நிலையில், நேற்றிரவு துவர்க்காபார் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது வீட்டில் மனைவி, குழந்தைகள் என யாரும் இல்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, சோனா குட்டுலுவின் வீட்டுக்குச் சென்றதாகக் கூறியிருக்கின்றனர்.
இதையடுத்து, துவர்க்காபார் குட்டுலுவின் வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கிறார். வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், அந்த வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்திருக்கிறார். வீட்டினுள் தன்னுடைய இரண்டு குழந்தைகளும் வாயில் டேப் ஒட்டப்பட்டு இறந்த நிலையிலும், மனைவி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்திலும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த சோழவரம் பகுதி போலீஸார், ஆபத்தான நிலையிலிருந்த சோனாவை மீட்டு சிகிச்சைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தலை, கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இருந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. அதேபோல, உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவரும் ஒரே தொழிற்சாலையில் வேலைபார்த்து வருவதால், குட்டுலு அடிக்கடி துவர்க்காபார் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது, திருமணமாகாத குட்டுலுவுக்கும், துவர்க்காபார் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். அது ஒருகட்டத்தில் திருமணம் தாண்டிய உறவாகவும் மாறியிருக்கிறது. சம்பவம் நடந்த அன்று சோனா குட்டுலுவை சந்திக்கத் தன்னுடைய குழந்தைகளுடன் அவரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
அங்கே இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் குட்டுலு குழந்தைகளின் வாயில் டேப் ஒட்டி, தலையில் அடித்துக் கொலைசெய்திருக்கிறார். மேலும், சோனாவை அரிவாளால் தலையிலும், கழுத்திலும் வெட்டிவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறார். தப்பிச் சென்ற குட்டுலுவை தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் இரண்டு குழந்தைகள் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.