பழநி தைப்பூசத் திருவிழா | திரு ஊடல் வைபவம், தெப்ப உற்சவத்துடன் நிறைவு

பழநி: பழநியில் வெகு விமரிசையாக நடைபெற்ற தைப்பூசத் திருவிழா திருஊடல் வைபவம், தெப்பத்தேர் உற்சவம் மற்றும் கொடியிறக்குதலுடன் நிறைவு பெற்றது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தந்தப் பல்லக்கு, தங்க மயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பிப்ரவரி 3ம் தேதி திருக்கல்யாணமும், பிப்ரவரி 4ம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. திருவிழாவின் 10-ம் நாள் விழாவையொட்டி நேற்று இரவு தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, காலை 8:45 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக் குமார சுவாமி புதுச்சேரி சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருஊடல் வைபவம்: வள்ளியை திருமணம் செய்துக் கொண்ட முத்துக்குமாரசுவாமி, தெய்வானையை சமாதானப்படுத்தும் திரு ஊடல் வைபவம் நடைபெற்றது. அப்போது, முத்துக் குமார சுவாமி வள்ளியை திருமணம் செய்ததை அறிந்து கோபம் அடைந்து கோயில் நடையை சாத்திக் கொண்டார்.

சுவாமி வள்ளியுடன் கோயிலுக்கு வெளியே நின்றுக் கொண்டு, வீரபாகுவை தெய்வானையிடம் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அனுப்பி சமாதானப்படுத்தினார். அதற்கான தூதுப் பாடல்களை சிவநாகராஜன் பாடினார். சமாதானமடைந்த தெய்வானை கோயில் நடையை திறந்து சுவாமிக்கு வழிவிட கோயிலுக்கு நுழைந்த முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானை சமேதமாக பக்தர்களுக்கு அருள்புரிந்தனர்.

தெப்ப உற்சவம்: விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு 7 மணிக்கு கோயிலை ஒட்டியுள்ள தெப்பத்தில் தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.