புதுடெல்லி: டெல்லியில் 2021-22-ம் ஆண்டுக்கான மதுபானங்களுக்கான கலால்வரிக் கொள்கை மாற்றம் செய்யப்பட்டது. இதில் ஆம் ஆத்மி அரசு மீது ஊழல் புகார் கிளம்பியுள்ளது. டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் கீழ் இத்துறை செயல்படுகிறது. ஆம் ஆத்மி அரசின் கலால் வரி கொள்கைக்கான அறிவிப்பு, கடந்த 2021, ஜுலை 5-ல் வெளியிடப்பட்டது.
அதேசமயம், இந்த கொள்கையின் வரிக் குறைப்பு தகவலை மதுபான தொழிலதிபர்களுக்கு சாதகமாக, முன்னதாகவே (2021, மே 31) கசியவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதன்மூலம் டெல்லி மதுபான தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பல கோடி ரூபாய் லாபம் அடைந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த லாபத்திற்கு பிரதிபலனாக ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான விஜய் நாயரிடம் ரூ.100 கோடி வழங்கப்பட்டதாகவும் இதில் சுமார் ரூ.30 கோடி, ஹவாலா மூலமாக கைமாறியதாகவும் தகவல் வெளியானது. எனவே டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் சக்சேனாவால் இப்புகார், மத்திய உள்துறை அமைச்சகத்தின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணைக்காக, கடந்த செவ்வாய்க்கிழமை, புச்சிபாபு கொரண்ட்லா என்பவரை சிபிஐ அழைத்தது. இவர், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதாவின் முன்னாள் ஆடிட்டர் ஆவார். விசாரணையில் சிபிஐக்கு புச்சிபாபு ஒத்துழைப்பு அளிக்காததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், டெல்லி கலால் வரி முறைகேட்டில் தொடர்புள்ள ‘தென்மாநிலக் குழு’ எனும் தொழிலதிபர்களுக்கு உதவியதாக புகார் உள்ளது. இவ்வழக்கில் ஆம் ஆத்மி ஊடகப் பிரிவு தலைவர் விஜய் நாயர், தொழிலதிபர் அபிஷேக் பொயின்பாலி ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர்.
ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் டெல்லி அரசு அதிகாரிகள் உள்ளிட்ட எட்டு பேர் சிபிஐ.யால் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, முன்னாள் எம்.பி.யும் பிஎஸ்ஆர் கட்சி எம்எல்சியுமான கே.கவிதா, ஆந்திராவின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான மாகுண்ட ஸ்ரீனிவாசலு ரெட்டி உள்ளிட்டோர் பெயர்களும் 10,000 பக்க குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
சிசோடியா உள்ளிட்டோர் இவ்வழக்கு பதிவான பிறகு தாங்கள் பயன்படுத்திய 140 கைப்பேசிகளின் தகவல்களை அழித்ததாக புகார் உள்ளது. ரூ.1-2 கோடி மதிப்புள்ள இந்தக் கைப்பேசிகளில் முக்கிய ஆதாரங்கள் இருந்துள்ளன.
இதுபோல் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சிசோடியா, கவிதா உள்ளிட்டோர் மறுத்துள்ளனர். எனினும் இவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்ட உள்ளது.