
சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் சரிவர இயங்கவில்லை எனப் பயனாளிகள் புகார் தெரிவித்திருக்கின்றனர். புதிதாகக் கணக்குகளைப் பின்தொடர்வதிலும், ட்வீட் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கிறது.

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் (Curiosity Rover), செவ்வாய்க் கிரகத்தின் பாறைகளில் அலைகளினால் ஏற்பட்ட தடங்கள் இருப்பதை கண்டறிந்திருக்கிறது. இது செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான சான்று என விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

டிஸ்னி நிறுவனம் 7,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருக்கிறது. கடந்த ஆண்டு டிஸ்னி, ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் சப்ஸ்க்ரைபர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதால் இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், காசியன்டெப் பகுதியில் வெப்பநிலை மைனஸ் ஐந்து டிகிரி வரை சென்றிருக்கிறது. இதனால் மக்கள் இரவு நேரங்களில் கார்களில் தங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவரின் லேப்டாப் சார்ஜர் தீப்பற்றியதால் விமானத்தில் பதற்றம் ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானப் பணியாளர்கள் உட்பட நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கனடாவில் 18 வயதாகும் ஜூலியட் லாமோர் என்பவர் 48 மில்லியன் டாலர் மதிப்புடைய லாட்டரியை வென்றிருக்கிறார். தன் தாத்தாவின் பேச்சைக் கேட்டு விளையாட்டாக வாங்கியதாகக் கூறியிருக்கிறார். இதன் மூலம் தான் விரும்பிய மருத்துவ படிப்பை எந்த ஒரு தடையுமில்லாமல் படிக்க இயலும் எனக் கூறியிருக்கிறார்.

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்த பெரு நாட்டைச் சேர்ந்த சிற்பம் ஒன்று பெரு நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. 2,500 ஆண்டுகள் பழமையான, 200 கிலோ எடையுள்ள இந்தச் சிற்பம் பெருவிலிருந்து கடத்தி வந்ததாக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் விளக்கமளித்திருக்கின்றனர்.

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியிருந்த கைகுழந்தையை அதன் உறவினர் தொப்புள் கொடியுடன் மீட்டிருக்கிறார். குழந்தையின் தாய் இறந்துவிட்ட நிலையில், இடிபாடுகளிலிருந்து இந்தக் குழந்தையைக் காப்பாற்றியிருக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவில், அரசு அலுவலகங்களில் உள்ள சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக அகற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,000-ஐ கடந்திருக்கும் நிலையில், மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்பட்டிருந்ததை அந்த நாட்டு அதிபர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

வடகொரியா ராணுவம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதையொட்டி இரவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.