2023ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏனெனில் 9 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதில் தென்னிந்தியாவில் தேர்தல் நடக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தெற்கில் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மாநிலம். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் சூழலில் கர்நாடக மாநில வெற்றியை பாஜக மிகவும் முக்கியமானதாக பார்க்கிறது.
பாஜக அரசு மீது விமர்சனம்
தற்போதைய சூழலில் கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன. அரசு டெண்டர்களை முடிக்க கமிஷன் கேட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் அமைச்சர்களுக்குள் மோதல், ஹிஜாப் விவகாரம், லவ் ஜிகாத் சர்ச்சை, பெங்களூருவின் மோசமான கட்டமைப்பு வசதிகள் என குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே செல்கின்றன.
கருத்துக்கணிப்பு முடிவுகள்
இந்நிலையில் கர்நாடகா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் இணைந்து சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில்,
காங்கிரஸ்
108 முதல் 114 இடங்களில் வெல்லும் என்று தெரியவந்துள்ளது. கர்நாடக சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். அப்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சி வெற்றியை கிட்ட நெருங்கி விட்டதாக பார்க்கப்படுகிறது.
கிங் மேக்கர் மதச்சார்பற்ற ஜனதா தளம்
இதையடுத்து பாஜக 65 முதல் 75 இடங்களில் வெல்லும் என்றும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 34 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக ஒக்கலிகா மற்றும் ஓல்டு மைசூர் மண்டலத்தில் உள்ள தனது செல்வாக்கை பயன்படுத்தி 25 முதல் 35 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்று விடும். இதன்மூலம் ஆட்சியை தீர்மானிக்கும் கிங் மேக்கராக வலம் வந்து கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை
அந்த வரிசையில் நடப்பாண்டு தேர்தலில் மீண்டும் ஒரு முறை கிங் மேக்கர் வாய்ப்பு காத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஆனால் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெற அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. வாங்கி வங்கியை பொறுத்தவரை காங்கிரஸ் 38.14 முதல் 40 சதவீத வாக்குகளை பெறக்கூடும்.
சரியும் பாஜக
பாஜக கடந்த முறையை காட்டிலும் 2.35 சதவீதம் குறைந்து 34 சதவீத வாக்குகள் பெறும். மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் வாக்குகளும் சரிவை சந்திக்குமாம். இது 17 சதவீத வாக்குகளை பெறக்கூடும். சுயேட்சைகள் உள்ளிட்ட பிற கட்சிகள் 6 சதவீத வாக்குகளை பெறும் எனச் சொல்லப்படுகிறது. பாஜக வெற்றி வாய்ப்பு சரிவிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்பட்டதை கூறுகின்றனர்.
சமூக வாக்குகள்
சமூக ரீதியிலான வாக்குகளை பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள், சிறுபான்மையினரின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் கிடைக்குமாம். ஒக்கலிகா சமூக வாக்குகள் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 50 சதவீதமும், காங்கிரஸிற்கு 38 சதவீதமும், பாஜகவிற்கு 10 சதவீதமும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.