எடப்பாடி தமாக-வுக்கு செய்தது துரோகம்.. கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி..!

திமுக
கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சிகள் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்ட கட்சிகளாகிவிட்டது என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை கேடிசி நகரில் நடைபெற்ற அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழாவிற்கு வந்திருந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், திமுக கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சிகள் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்ட கட்சிகள் ஆகிவிட்டது. பல கட்சிகளுக்கு அதிமுக உதவிகரமாக இருந்து கொண்டிருக்கிறது. அவர்களை அதிமுக தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும், இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறினார். இதில் பாஜகவை அவர் மறைமுகமாகவும், திமுக கூட்டணி கட்சிகளை நேரிடையாகவும் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் எடபடியின் பேச்சுக்கு தமிழக
காங்கிரஸ்
கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி எதிர்வினையாற்றியுள்ளளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி, கடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. திமுக தலைமை காங்கிரஸுக்கு தொகுதியை ஒதுக்கியது போல, இந்த இடைத் தேர்தலில் அதிமுக ஏன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவில்லை? இதைவிட கூட்டணி தர்மத்திற்கு உலை வைக்கிற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழ் மாநில காங்கிரசை ஒரு கட்சியாகவே கருதாமல் அலட்சியப் போக்கோடு ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுக அபகரித்துக் கொண்டுள்ளது. இதுதான் அதிமுக கூட்டணி கட்சிகளை நடத்துகிற விதம்.

இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை திமுக அடிமைப்படுத்தி நடத்துகிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை மிகுந்த சுயமரியாதையோடு, சுய சிந்தனையோடு செயல்பட்டு வருகிறோம். ஆனால், அதிமுகவை பொறுத்தவரை யார் காலில் விழுந்து, எப்படி பதவி பெற்றார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இத்தகைய அடிமைத்தன அரசியல் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.