விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் ஒதியத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் டெய்சி. இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த எமிலிமேரி என்பவர் சத்துணவு கூடத்தில் வேலை வாங்கித்தருகிறேன் பணம் கொடு என்று கேட்டுள்ளார்.
அதற்கு டெய்சி என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதற்கு எமிலி மேரி, நகையை அடமானம் வைத்தாவது பணம் கொடு, நான் நிச்சயமாக சத்துணவு வேலை வாங்கித் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய டெய்சி நான்கு பவுன் தங்கச் சங்கிலியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி எமிலிமேரியிடம் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, டெய்ஸி சில தினங்களுக்கு முன்பாக எமிலிமேரியிடம் வேலை எப்போது கிடைக்கும் என்று கேட்டுள்ளார்.
இதற்கு அவர் சரியான பதில் கூறாததால், அதிர்ச்சியடைந்த டெய்சி இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், டெய்சி தனது மூன்று பெண் குழந்தைகளுடன் விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தான் கொண்டு வந்த மண்எண்ணை கேனை திறந்து தன மீது ஊற்றிக்கொண்டு, பின்னர் மூன்று குழந்தைகள் மீதும் ஊற்ற முயற்சி செய்துள்ளார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் தாலுக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.