அதானி குழும முறைகேடு விவகாரம்: செபி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் கெடு

புதுடெல்லி: அதானி குழும முறைகேடு விவகாரத்தில் தொடரப்பட்ட ரிட் மனுவுக்கு செபி அமைப்பு வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை ஜனவரி 24ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘அதானி குழுமம் தொடர்பான முறைகேடு விவகாரங்களை முறையாக விசாரிக்க வேண்டும். இதுதொடர்பான விரிவான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். அதனை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு செய்ய வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவானது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, ‘‘அதானி நிறுவன முறைகேடுகளை விசாரிக்க ஒரு வழிகாட்டுதல்களையும், கமிட்டியும் அமைக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘நான் செபி அமைப்பின் சார்பாக ஆஜராகி உள்ளேன். இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கிறேன்’’ என கூறினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘ஒருேவளை நீங்கள் நிதி அமைச்சகத்துடன் பேசி வழிமுறைகளை கொடுக்கலாம். உண்மையில் அது இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததாக கூட இருக்கும். இருப்பினும் இந்த விவகாரத்தில் வரும் திங்கட்கிழமைக்குள் செபி அமைப்பு பதிலளிக்க வேண்டும் ’’ என உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.