புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் அரவிந்த் குமார் வருகிற திங்கட்கிழமை காலை பதவியேற்கின்றனர். உச்ச நீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் கடந்த 6ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, மேலும் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற தலமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்தது.
இதனை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டதாக ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தனது டிவிட்டர் பதிவில் அறிவித்தார்.இதன்படி, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜேஷ் பிண்தால் மற்றும் அரவிந்த் குமார் நாளை மறுநாள் (திங்கட் கிழமை) காலை 10.30 மணியளவில் பதவியேற்று கொள்கின்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நீதிபதி பிண்டால் வருகிற ஏப்ரலில் 62 வயது நிறைவு பெறுகிறார். இதனால், அவருக்கு 3 ஆண்டு பதவி காலம் மீதமுள்ளது. நீதிபதி அரவிந்த் குமாருக்கு வருகிற ஜூலையுடன் 61 வயது பூர்த்தியடைகிறது. இதனால், அவருக்கு 4 ஆண்டு பதவி காலம் மீதமுள்ளது. இவர்கள் பதவியேற்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து, முழு பலத்தை எட்டும். அதே சமயம், வரும் மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையே, உச்ச நீதிமன்றத்தின் 6 நீதிபதிகள் 65 வயதை எட்டி ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.