ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால், கூடுதலாக 1,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதிஇடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது பயன்படுத்துவதற்காக, கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளியில் இருந்து, கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றை மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி,தேர்தல் பார்வையாளர் சுரேஷ்குமார் சதீவ் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இடைத்தேர்தலுக்கு 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அதிக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக 1,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 21 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 8 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு, பெல் நிறுவனப் பொறியாளர்களால் சரி பார்க்கப்பட்டு, பின்னர் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கூறினார். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கோட்டாட்சியர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.