தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலைகள் செய்யும் சோக சம்பவங்கள் தொடர்ந்து நடந்தவாறு இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் மசோதாவை அக்டோபரில் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது தமிழக அரசு. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இம்மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தென் சென்னை தொகுதியின் எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து கேள்வி எழுப்பினார்.

“ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யக் கோரி தமிழ்நாடு அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது, ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 40 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுக்க ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?” எனக் கேள்வி எழுப்பினார் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன். தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி-க்கு பதிலளித்த பதில் கூறிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஒரு மாநிலத்தில் நடைபெறும், குறிப்பிட்ட விவகாரம் குறித்து இங்குப் பதில் கூற இயலாது. 19 மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான மசோதாவைக் கொண்டு வந்துள்ளனர். அனைத்து மாநிலங்களும் முன்வந்தால் தேசிய அளவில் மசோதா கொண்டுவருவது குறித்து அரசு ஆலோசிக்கும்” என்றார்
”ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும்” – மருத்துவர் ராமதாஸ் ட்வீட்
ஆளுநர் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில் பிப்ரவரி 9-ம் தேதி சேலத்தைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்திருக்கிறார். அது குறித்து ட்வீட் செய்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 43-வது தற்கொலை இது. சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 14-ஆவது தற்கொலை இது. கடந்த 3 நாள்களில் நிகழ்ந்த 2வது தற்கொலை இது .

இவற்றுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும்” என்றார். மேலும் இதுபோன்ற துயர சம்பங்கள் நிகழாமலிருக்க ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மட்டுமின்றி எம்.பி கனிமொழி, எம்.பி திருச்சி சிவா ஆகியோரும் நாடாளுமன்றத்தில் தமிழக ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நம்முடன் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், ”தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து திமுக-வினர் தெருக்கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சட்டமன்றம் என அனைத்திலும் தான் பேசி வருகின்றனர். போதாக்குறைக்கு தற்போது நாடாளுமன்றத்திலும் அதையே பேசத் தொடங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பேசிவரும் திமுக எம்.பிக்கள் முதலில் 2023 பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்களைப் பாராட்ட வேண்டும். மற்றொன்று நாடாளுமன்றத்தில் சென்று இதனைப் பேசியாக வேண்டுமா? நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டம் குறித்தல்லவா பேசியிருக்க வேண்டும். சென்னையில் மெட்ரோ இருக்கிறது, கோவைக்கு வரப்போகிறது, மதுரைக்கு மெட்ரோ தேவை என்றல்லவா அவர்கள் பேசியிருக்க வேண்டும். இந்ததெந்த துறைகளுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளீர்கள். கூடுதலாக இவ்வளவு தேவைப்படுகிறது என்றல்லவா பேசியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு தமிழக ஆளுநரை நாடாளுமன்றத்தில் விமர்சித்து வருகின்றனர். அங்கே போய் திட்ட வேண்டியது, பின் நேரில் சென்று விருந்தில் கலந்து கொள்வது, உடன் நின்று கொடியேற்றுவது. திமுக என்றால் இரட்டைவேடம்தான்” எனக் தொடர்ந்து பேசிய கரு நாகராஜன், “ஆன்லைன் சூதாட்டத்தைத் தமிழக பாஜக-வும் எதிர்க்கிறது. அதனை எதிர்த்து முதலில் போராடிய கட்சி பாஜக. தேசம் முழுமைக்கும் தடை சட்டம் இயற்றினாலும் அதனை வரவேற்போம். நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த வழக்குகள் இருப்பதால் அதுதொடர்பாக ஆளுநர் ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை விரைந்து கவர்னர் முடிப்பார் என எதிர்பார்ப்போம். ” என்றார்.

இதுகுறித்து பேசிய திமுக முக்கிய பிரமுகர் கோவை செல்வராஜ் “நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் மக்கள் பிரச்னையை பேச வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தில் 40 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யாமலிருந்த ஆளுநர் குறித்து கேள்வி எழுப்புவதும் மக்கள் பிரச்னை தானே?, ஆளுநர் தவறு செய்தால் விமர்சிப்பதும், மரபுகளை கடைபிடித்து தான் ஜனநாயகம். அந்த வகையில் ஆளுநர் செய்யும் தவறுகளை திமுக சுட்டிக்காட்டுகிறது. குடியரசு தினத்தில் தேநீர் விருந்தை ஆளுநர் ஏற்பாடு செய்வதும் அதில் முதல்வர் பங்கேற்பதென்பது முதல்வரின் பெருந்தன்மை. மத்திய அரசுக்குத் தொடர்புள்ள முக்கிய புள்ளிகள் இந்த சூதாட்டத்தை க்ளப்புகளை நடத்தி வருவதால் தான் பாஜக அரசு தடைசெய்யாமல் இருக்கிறது. சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டத்தின் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. உயிர்களைப் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் வரி வருவாயை எதிர்பார்க்கிறதா? இத்தகைய தீமைகள் கொண்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மத்திய அரசு ஏன் தயங்குகிறது?” எனக் கேள்வி எழுப்புகிறார் கோவை செல்வராஜ்