புதுடெல்லி: தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், அரசின் ஊடக பிரிவான பிஐபி எனப்படும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ மூலம் உண்மை தன்மையைக் கண்டறிவது தொடர்பான முன்மொழிவு குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். அதில் கூறியிருப்பதாவது: இணைய வசதியின் பெருக்கத்தால் அதிக அளவிலான இந்தியர்கள் தற்போது இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வளர்ச்சியால் பிழையான, உண்மைக்கு புறம்பான, தவறாக வழிநடத்தும் தகவல்களும் அதிகரித்துள்ளன. அவ்வாறன தகவல்களை வெளியிடும் மக்களின் எண்ணிகையும் அதிகரித்துள்ளன.
மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 -ன் கீழ், சமூக ஊடக இடைத்தரகர்கள் உள்ளிட்ட இடைநிலையாளர்களின் மீது குறிப்பிட்ட கட்டுப்பாடுகளைச் செலுத்தும் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுநெறிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக விதிமுறைகள்) விதி 2021 – ஐ உருவாக்கி உள்ளது. இது இடைநிலையாளர்களின் தொடர் செயல்பாடுகளை கண்காணிக்கிறது.
இந்த விதியின் கீழ், தொடர் செயல்பாடுகள் என்பது இடைநிலையாளர்கள் தங்களின் பயனர்களை கண்காணிப்பது உள்ளிட்ட பொறுப்புகளை உள்ளடக்கியது. இதில், தெரிந்தோ அல்லது வேண்டும் என்றோ ஏதாவது தவறான, உண்மைக்கு புறம்பான, தவறாக வழிநடத்தும் தகவல்களை பரப்புவது, பதிவேற்றுவது, பதிப்பிப்பது, பரிமாற்றம் செய்வது உள்ளிட்டவை அடங்கும்.
தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் இடைநிலையாளர்களின் தொடர்செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், பிரஸ் இன்ஃப்ரமேஷன் பிரோ (பிஐபி) மூலம் தகவலின் உண்மையைக் கண்டறிவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது.
வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பகத்தன்மையுடன் கூடிய இணைய பயன்பாட்டிற்காக பிஐபியின் கீழ் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தகவல்களின் உண்மை சரிபார்க்கும் பிரிவு தொங்கப்பட்டது. உண்மை சரிபார்க்கும் பிரிவு தன்னிச்சையாகவோ, குடிமக்களின் வேண்டுகோள்களுக்கு இணங்கவோ, மத்திய அரசு சார்ந்த தகவல்கள் போன்றவைகளின் உண்மைய சரிபார்த்து அதில் போலிகள் மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல்களை கண்டறிந்து தெரிவிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.