இஸ்ரேல் உறவைத் துண்டித்தார் பார்சிலோனா மேயர்.. பாலஸ்தீனத்தில் மனித உரிமை மீறல் என புகார்

மாட்ரிட்: பார்சிலோனா நகருக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை தற்காலிகமாக துண்டிப்பதாக பார்சிலோனா நகர மேயர் அடா கொலாவ் அறிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தில் தொடர்ந்து திட்டமிட்டு மனித உரிமைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதாக அடா கொலாவ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று பார்சிலோனா. சர்வதேச நகரான பார்சிலோனாவின் மேயராக இருப்பவர் இடதுசாரி தலைவரான அடா கொலாவ். பார்சிலோனாவுக்கும், இஸ்ரேலின் டெல்அவிவ் மற்றும் காஸா நகரங்களுடன் கடந்த 25 வருடங்களாக பல்வேறு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் தற்போது இந்த உறவுகள் அனைத்தையும் பார்சிலோனா மாநகரம் தற்காலிகமாக துண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கு அடா கொலாவ் கடிதம் எழுதியுள்ளார். அதில், திட்டமிட்ட வகையில் பாலஸ்தீனத்தில் மனித உரிமைகளை இஸ்ரேல் அரசு அரங்கேற்றி வருகிறது. இதை உடனடியாக நிறுத்துவதோடு, சர்வதேச சட்டங்களையும், ஐ.நா. தீர்மானங்களைக் கடைப்பிடிப்பதையும் இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும். அதுவரை, இஸ்ரேல் நாட்டு நகரங்களுடனான எங்களது உறவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். நாங்கள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார் அடா.

‘பிரதமராக இம்ரான் கான் தொடர்ந்திருந்தால்..’- முன்னாள் ராணுவ தளபதி பரபரப்பு.!

கொலாவ் மேலும் கூறுகையில், இஸ்ரேலியத் தரப்பும், பாலஸ்தீனியர்களும் இணைந்து செயல்பட முன்வர வேண்டும். அதுதான் மத்திய கிழக்கில் அமைதி நிலவ உதவும். நாங்கள் பொதுவாக சர்வதேச பிரச்சினைகளில் தலையிடுவதில்லை. இருப்பினும், 100க்கும் மேற்பட்ட அமைப்புகள், 4000க்கும் மேற்பட்ட குடிமக்கள், இஸ்ரேல் உறவைத் துண்டிக்க வேண்டும் என்று கோரி வந்தனர். அதை ஏற்றே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அடாவின் முடிவை இஸ்ரேல் கண்டித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ அமைச்சக செய்தித் தொடர்பாளர் லியார் ஹயாட் கூறுகையில், இது பார்சிலோனா மக்களின் விருப்பத்திற்குப் புறம்பான முடிவு. இதைக் கண்டிக்கிறோம் என்றார்.

இதேபோல ஸ்பெயின் நாட்டு யூதர் சமுதாய சம்மேளனமும் மாநகர மேயரின் இந்த முடிவைக் கண்டித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், இஸ்ரேல் மட்டுமே யூதர்களுக்கான ஒரே நாடு. இந்த ஒரு காரணத்தை மனதில் வைத்தே உள்நோக்கத்தோடு மேயர் முடிவெடுத்துள்ளார். இது அரசியல் ரீதியிலான நடவடிக்கை. மனித உரிமைக்கும், அமைதிக்கும் இங்கு அவர் முக்கியத்துவம் தரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

துருக்கி நிலநடுக்கத்தின் அவலத்தை உணர்த்தும் புகைப்படம்; தந்தை பாசத்தால் சோக அலை.!

கொலாவ், ஐக்கிய இடதுசாரி கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒரு சிறிய கட்சியின் தலைவர் ஆவார். இந்தக் கூட்டணி, ஆளும் ஸ்பெயின் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டை சோசலிஸ்டுகள் தலைமையிலான கூட்டணி அரசு ஆண்டு வருவது நினைவிருக்கலாம்.

பார்சிலோனாவில் 1700 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்கள் குடியேறினர். ஆனால் 1391ம் ஆண்டு அவர்கள் மீது பெரும் தாக்குதல் நடைபெற்றது. இதையடுத்து யூதர்கள் பலர், பார்சிலோனாவை விட்டு வெளியேறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.