சிங்கார வேலரின் நினைவு தினத்தையொட்டி அவரின் உருவத்துக்கு மரியாதை செய்தபிறகு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், டி.டி.வி தினகரன், ஒ.பி.எஸ் போல எங்களை எதிர்கொள்ள தி.மு.க-வுக்கு தில் கிடையாது. அதனால் தான் காங்கிரஸை நிற்க வைத்திருக்கிறது. ஏற்கெனவே தேவையற்ற சுமை என காங்கிரஸை கூறி வந்த தி.மு.க, இந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்றவுடன், காங்கிரஸை காரணம் காட்டி தப்பித்துவிடும்.
தி.மு.க ஆட்சியில் மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வருகிறார்கள். உரிமைத் தொகை ரத்து, முதியோர் தொகை குறைப்பு, பால், பால் பொருள் விலை உயர்வு, சொத்து வரி, மின் கட்டண உயர்வு என எல்லாவற்றையும் உயர்த்தி மக்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறது தி.மு.க. ஸ்டாலின் போல பொய் பேசுபவரை நான் பார்த்ததே இல்லை. வாய் கூசாமல் 85 சதவிகித திட்டங்களை நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறார். அதனால் இந்த தேர்தலில் தி.மு.க-வின் தோல்வி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொளிக்கும்.

இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் ஈரோட்டில் நிலவரியை ரத்து செய்திருக்கிறது. நிறைவேற்றப்படாத திட்ட வேலைகள் இரவு, பகலாக செய்யப்படுகிறது. பேனா சிலையால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்யும் அந்த பேனா சின்னம் அமைக்க வேண்டுமா? அதை அறிவாலயத்தில் வானுயர வைக்கட்டும் யார் கேட்கப்போகிறார்? பள்ளிக்கூடம் நடத்த வசூல் செய்யும் அரசுக்கு பேனா சிலை வைக்க பணம் இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.