சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் அறிவித்த பின்பு சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 77-வது நினைவு நாளையொட்டி லேடி வெலிங்டன் கல்லூரி அருகே உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளரை முன்மொழியவும், வழிமொழியவும் ஆள் இல்லை. டிடிவி தினகரனுக்கு தேர்தல் என்றால் பயம். நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தில்லுடன் தேர்தலில் போட்டியிடுகிறோம். ஆனால் திமுக. காங்கிரஸ் கட்சியை நிறுத்துகிறது. துணிச்சல் இருந்தால் திமுக நிற்க வேண்டியது தானே?.
மொத்த அமைச்சர்களும் ஈரோட்டில் தான் உள்ளனர். முதல்வரும், உதயநிதியும் மட்டுமே சென்னையில் உள்ளனர். இரவோடு இரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அனைத்து சாலைப் பணிகளையும் செய்கிறார்கள். இதற்கு முன்பு ஏன் செய்யவில்லை.
எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்து வருகிறார்கள். 85% தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய் கூறுகிறார். உலகத்தில் இவரைப் போன்று பொய் சொல்பவரை நான் பார்த்தது இல்லை. அறிவாலயத்தில் 10 ஆயிரம் அடி கூட சிலை வைத்துக் கொள்ளுங்கள். நிலவு வரை வைத்துக் கொள்ளுங்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.