குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட SSLV – D2 ராக்கெட் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இனி இந்த வகை ராக்கெட்டுகள் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் SSLV – D1 ராக்கெட் இஸ்ரோ விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த சுற்று வட்டப்பாதையில் இது செயற்கைக்கோள்களை சரியாக நிலை நிறுத்தவில்லை என்பதால், அத்திட்டம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், மீண்டும், SSLV – D2 ராக்கெட்டில் மூன்று செயற்கைக்கோள்கள் விண்ணில் நேற்று ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு தற்போது இரண்டாவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவி இருக்கிறோம். இந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். தற்போது SSLV ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படுகிறது. அதேபோல தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கப்பட்ட பிறகு அங்கிருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

ராக்கெட்டுகளை விண்ணில் ஏக பூமத்திய ரேகை ஒரு முக்கியமான கணக்காகும். எந்த அளவிற்கு இந்த பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுகிறோமோ அந்த அளவிற்கு திட்டம் எளிதில் வெற்றி பெறும். ஸ்ரீஹரிகோட்டா பூமத்திய ரேகையிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்திருக்கிறது. ஆனால் குலசேகரப்பட்டினம் 8.36 டிகிரி வடக்கில் அமைந்திருக்கிறது. எனவே இங்கிருந்து ராக்கெட் ஏவப்படும்போது எரிபொருள் குறைந்த அளவில் பயன்படுத்தினால் போதுமானதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

மேலும், நெல்லை மாவட்டத்தின் மகேந்திரகிரி திரவ இயக்க அமைப்பு மையத்திலிருந்து தான் ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் கொண்டு செல்லப்படும் நிலையில் அதன் உதிரிபாகங்களும் இங்கிருந்துதான் சாலை வழியாக ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைத்தால் போக்குவரத்து செலவுகளும் குறையும். ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுப்பெற்று கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் குலசேகரப்பட்டினத்திலிருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கூறியிருப்பது தமிழ்நாடு மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.