புத்தூர்(கர்நாடகா): தேச விரோத சக்திகளை வளர்க்கும் கட்சி காங்கிரஸ் என்றும், அக்கட்சியால் கர்நாடகாவுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அம்மாநிலத்தின் புத்தூருக்கு அமித் ஷா இன்று (சனிக்கிழமை) சென்றார். அங்குள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “அடிப்படை விவசாய கடன் குழுக்களை அமைப்பதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு விவசாய கடன் குழு அமைக்க பிரமதர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவுக்கு அருகிலேயே கேரளா இருக்கிறது. நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. கர்நாடகா பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் அது பாஜகவால் மட்டும்தான் முடியும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் மட்டும்தான் முடியும்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 1,700 கைதிகளை விடுவித்தது. பிரதமர் நரேந்திர மோடி அந்த அமைப்பையே நிரந்தரமாக தடை செய்துவிட்டார். தேச விரோத சக்திகளை வளர்க்கக்கூடிய கட்சி காங்கிரஸ். அவர்களால் ஒருபோதும் கர்நாடகாவிற்கு பாதுகாப்பு கிடைக்காது” என்று அவர் பேசினார்.