திருச்சி: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் முடிவுகள் தேமுதிகவின் பலத்தை நிரூபிக்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.
இது குறித்து திருச்சியில் அவர் கூறும்போது, “தற்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. பணநாயகம், ஆட்சி பலம், அதிகார பலம் எல்லாவற்றையும் எதிர்த்து தான், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனியாக களம் காண்கிறோம். இங்கு 2011-ல் தேமுதிக வெற்றி பெற்றுள்ளதால், மக்களின் ஆதரவு எங்களது வேட்பாளருக்கு அதிக அளவில் உள்ளது.
இந்த தேர்தல் முடிவு வரும்போது தேமுதிகவின் பலம் என்ன என்பது தெரியவரும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்தஇடைத்தேர்தல் முடிவு தான் தமிழகம் முழுவதும் தேமுதிகவுக்கு உள்ள செல்வாக்கை வெளிக்காட்டும்.
தேமுதிகவை யாரும் பின்னின்று இயக்கவில்லை. தலைவர் விஜயகாந்தின் முடிவுப்படி தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். நான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி அதில் எடுக்கப்படும் முடிவை விஜயகாந்த் அறிவிப்பார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலில் எழுதாத பேனா சின்னம் அமைக்கத் தேவையில்லை. இந்த நிதியைக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கலாம் என்பது தான் எங்களது நிலைப்பாடு” என்று அவர் கூறினார்.
தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கோரிக்கை: இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில், மத்திய பாதுகாப்பு படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு நசியனூர் சாலையில், தேமுதிக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநில துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ், அலுவலகத்தைத் திறந்து வைத்து கூறியதாவது: “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா நடந்து வருகிறது. இதைத் தடுக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் மத்திய பாதுகாப்பு படை வர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். பண விநியோகத்தை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
வாக்குவாதம்: முன்னதாக, தேர்தல் அலுவலகம் திறப்பதையொட்டி, நசியனூர் சாலையின் இரு புறமும் தேமுதிக கொடி கம்பங்கள் நடப்பட்டு இருந்தன. அனுமதி பெறாததால் இவற்றை அகற்ற வேண்டும் என பறக்கும்படை அதிகாரிகளும், போலீஸாரும் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘விதிமீறல் என வழக்கு வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளுங்கள்; கொடிக்கம்பங்களை அகற்ற மாட்டோம்’ என தேமுதிகவினர் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.