டைம்ஸ் இலக்கிய திருவிழா: வாழ்வை மேம்படுத்தும் அற்புத இலக்கியங்கள்; சமிர் ஜெயின் சுவாரஸியம்!

தலைநகர் டெல்லியில் 7ஆம் ஆண்டு டைம்ஸ் இலக்கிய திருவிழா இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு எழுத்தாளர்கள், முக்கிய ஆளுமைகள், இளைஞர்கள், பல்துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் டைம்ஸ் குழுமத்தின் துணைத் தலைவரும், மேலாண் இயக்குநருமான சமீர் ஜெயின் பங்கேற்று பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

மீடியாக்களின் பங்கு

இதனை பலரும் வெகுவாக பாராட்டினர். தனது பேச்சிற்கு இடையில் சில நகைச்சுவை துணுக்குகளையும் முன்வைத்து அரங்கத்தை கலகலப்பாக மாற்றினார். சமிர் ஜெயின் பேசுகையில், மீடியாக்கள் Watchgod போன்று செயல்பட வேண்டும். ஒருபோதும் Watchdog போல இருந்துவிடக் கூடாது. அதாவது மீடியாக்கள் குரைக்கும் நாய்களாக இருக்கக் கூடாது. பரபரப்பான கருத்துகளை கூறும் இடமாகவும் இருக்க வேண்டாம்.

மாணவர்களின் கற்றல்

செய்தித்தாள்களை படிக்கும் போது மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உணர வேண்டும். பல்கலைக்கழகங்கள் (Universities) தங்கள் பெயரிலேயே Universe என்ற பதத்தை கொண்டிருக்கிறது. ஆனால் அந்த பேரண்டத்தை பற்றி சரியாக சொல்லி தருவதில்லை. வேலைவாய்ப்பிற்கு தயாராகும் மாணவர்களையே நம்முடைய கல்வி முறை உருவாக்குகிறது. ஆனால் கற்றல் என்பது அத்துடன் நின்றுவிடுவதில்லை.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

அதையும் தாண்டி பரந்து விரிந்து கிடக்கிறது. இவற்றை ஒவ்வொரு தலைமுறையினரும் சரியான முறையில் அடைய வேண்டியது அவசியம். நம்முடைய இலக்கியங்கள் செய்தித்தாள்கள் மூலம் ஏராளமான வாசகர்களை சென்றடைய வேண்டும். எல்லோரும் புத்தகம் படிப்பார்கள் என சொல்லிவிட முடியாது. எனவே தான் டைம்ஸ் ஆஃப் இந்தியா புத்தகங்களை பற்றிய சிறிய அறிமுகங்களை ஒவ்வொருக்கும் அளிக்கிறது.

இலக்கியங்களும், ஆன்மீகமும்

பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர் ஒருவர் கூறியது எனக்கு நினைவிற்கு வருகிறது. நீங்கள் மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றை வரலாறாக படித்தால் உங்களுக்கு புராணங்களாக தோன்றும். அதுவே புராணங்களாக படித்தால் வரலாறாக உணர்வீர்கள். அதுபோலத் தான் இந்திய இலக்கியங்களும், ஆன்மீகமும். இவற்றுக்கு இடையில் மெல்லிய கோடு மட்டும் தான் இருக்கிறது. ஒருபோதும் பிரித்து பார்க்க முடியாது.

இது ஆன்மீக நாடு

நமது இலக்கியங்களில் ஆன்மீகமும், தத்துவங்களும் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. இவை ஏதேனும் ஒரு மொழிக்கு மட்டும் சொந்தம் என சொல்லி விட முடியாது. அனைவருக்குமானது. ஆன்மீகம், மதம், நாடு ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. அதேசமயம் நம்முடைய நாட்டை மதச்சார்புள்ள நாடு என அழைத்து விடக் கூடாது. நம் நாடு ஆன்மீக நாடு. கபிர், குருநானக் என பலரின் படைப்புகள் பல தலைமுறைகளை தாண்டி இன்றும் நமக்கு உத்வேகமூட்டிக் கொண்டிருக்கின்றன.

கற்றலின் தாக்கம்

என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில் இலக்கியங்கள் வாயிலாக தான் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டேன். வில்லியம் ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தை பள்ளி, கல்லூரிகளில் பலமுறை நாம் படித்திருப்போம். அந்த நாடகத்தில் இருக்கும் இருண்ட பக்கங்கள் என் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றன. இளவயதில் கற்றுக் கொண்டதால் அவை இன்றும் நினைவில் நீங்காமல் இருக்கின்றன.

வாழ்வை மேம்படுத்தும் இலக்கியங்கள்

அந்த அளவிற்கு இலக்கியங்கள் மனிதர்கள் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற இலக்கியங்களும் தவறில்லை. ஆனால் என்னுடைய வேண்டுகோள் என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு இலக்கியங்கள் அறிமுகமாக வேண்டும். இதன்மூலம் அவர்களின் சிந்தனைகள் முற்றிலும் அழகாக புதுமையான முறையில் மாற வேண்டும். அவர்கள் வாழ்வு மேம்படக் கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று சமிர் ஜெயின் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.