வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அங்காரா: துருக்கியில் குழந்தையை காப்பாற்றிய இந்திய பெண் டாக்டரை, துருக்கி பெண் ஒருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இதுவரை 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி, சிரியாவிற்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில், இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள், மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சென்றுள்ளனர். உ.பி., மாநிலம் ஆக்ராவில் செயல்படும் ராணுவ மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோரும் துருக்கியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய ராணுவ மருத்துவ குழுவினர், துருக்கியின் ஹதே நகரில் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை அமைத்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ஹதே நகர மருத்துவமனையில் பணியாற்றும், இந்திய ராணுவ மருத்துவர் மேஜர் வீணா திவாரி, தன்னலமற்ற சேவையால் துருக்கி மக்களின் மனங்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இரவு, பகல் என பாராமல் முதியவர்கள், சிறுவர்கள் என சிகிச்சை அளித்து வருகிறார். இதற்கு அந்நாட்டு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். துருக்கி பெண் ஒருவர், வீணா திவாரியின் கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த புகைப்படத்தை இந்திய ராணுவம் வெளியிட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலானது.

துருக்கியின் காஜியன்டப் நகரிலும் கட்டட இடிபாடுகளில் இருந்துஏராளமான உடல்களை இந்திய தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர். 3 நாட்களாக கட்டட இடிபாட்டிற்குள் சிக்கித்தவித்த 6 வயது சிறுமி நஸ்ரினை இந்திய வீரர்கள் மீட்டனர். அவருக்கு வீணா திவாரி தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார். அந்த சிறுமியுடன் வீணா திவாரி இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement