"நாங்க இன்கம்டேக்ஸ் அதிகாரிங்க"-தம்பதியை கடத்திய கும்பல்.. க்ளைமேக்ஸில் நிகழ்ந்த ட்விஸ்ட்

திருமங்கலம் அருகே வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.5 லட்சம் பணம் கேட்டு தம்பதியை கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா (57). இவர் கப்பலூர் பகுதியில் உள்ள பிரபல மில் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கிருஷ்ணவேணி நிலையூரில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
சுப்பையா டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கவுண்டன்பட்டியில் தோட்டம் வாங்கி விவசாயம் செய்வதோடு அங்கு நவகிரக கோவில் வைத்து வழிபாடு செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பூஜையை முடித்துவிட்டு கோவிலில் இருந்தபோது, 2 கார்களில் 30 வயது முதல் 40 மதிக்கத்தக்க 5 நபர்கள் வந்ததுள்ளனர். இதையடுத்து அவர்கள் சுப்பையாவிடம், ”நாங்கள் வருமானவரித் துறையில் இருந்து வருகிறோம்.
image
அருகில் உள்ள காரில் வருமானவரித் துறை கமிஷனர் உள்ளார். அவரை நீங்கள் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். அதற்கு சுப்பையா ”நான் எதற்காக வரவேண்டும்?” என்று கேட்டுள்ளார். உடனே சுப்பையாவையும் அவரது மனைவியையும் கட்டாயப்படுத்தி காரில் கடத்தி உசிலம்பட்டி விலக்கு பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு, ”ரூ.5 லட்சம் கொடுத்தால் இருவரையும் விடுவிப்போம்; நாங்கள் கமிஷனரை சமாளித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்கள். அதற்கு சுப்பையா, ”உங்களுடைய அடையாள அட்டை காட்டுங்கள்” என்று கூறியுள்ளார்.
image
”எதற்காக அடையாள அட்டையை காட்ட வேண்டும்?” என்று கூறி இருவரையும் அதே இடத்தில் இறக்கி விட்டுச் சென்று விட்டனர். இது குறித்து சுப்பையா கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மதுரை மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் உத்தரவின் பேரில் திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார், கல்லுப்பட்டி இன்ஸ்பெக்டர் பத்மநாபன், ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
image
இதில், மதுரையைச் சேர்ந்த சாந்தி (45), முருகன் (42), சபரி (32), புகழ்ஹரிஸ்(24), ஈசாக் அகமது (45), முகமது ஜாகிர் உசேன் (42), பாலமுருகன் (56), தினேஷ்குமார் (29), ரிஷி குமார் (22) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.