செங்கோட்டை நீதிமன்றத்தில் தென்காசி இளம்பெண் ரகசிய வாக்குமூலம்

செங்கோட்டை: தென்காசி அடுத்த கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித். இவரும், வல்லம் முதலாளி குடியிருப்பைச் சேர்ந்த சா மில் அதிபர் நவீன் படேல் மகள் கிருத்திகாவும் கடந்த மாதம் 20ம் தேதி காதல் திருமணம் செய்துள்ளர். 25ம் தேதி கிருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், வீடுபுகுந்து கிருத்திகாவை கடத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து கிருத்திகா மற்றும் வினித் ஆகியோரது வீடியோ மற்றும் ஆடியோ உரையாடல் மற்றும் அறிக்கைகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் கடத்தல் வழக்கு தொடர்பாக கிருத்திகாவின் பெற்றோர் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். வினித்தும் மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி கிருத்திகா மதுரை உயர்நீதி நீதிமன்ற கிளையில் ஆஜரானார். அப்போது கிருத்திகாவை 13ம் தேதி வரை காப்பகத்தில் வைத்து கவுன்சலிங் கொடுக்கவும் விரிவான விசாரணை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி தென்காசி அடுத்த மேலகரம் இந்திரா நகரில் உள்ள மகளிர் காப்பகத்தில் கிருத்திகா தங்க வைக்கப்பட்டார். அங்கு 3 நாட்கள் கவுன்சலிங் கொடுக்கப்பட்ட நிலையில், நேற்று செங்கோட்டை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சுனில்ராஜா முன்னிலையில் கிருத்திகாவை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் சுமார் 1 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம், நாளை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.