Times LitFest 2023: மீடியாக்கள் எப்படி செயல்பட வேண்டும்? டைம்ஸ் குழுமத் துணைத் தலைவர் சமிர் ஜெயின்!

டெல்லியில் டைம்ஸ் இலக்கிய திருவிழா (Times Literature Festival) 7ஆம் ஆண்டாக நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று டைம்ஸ் குழுமத்தின் துணைத் தலைவரும், மேலாண் இயக்குநருமான சமிர் ஜெயின் உரையாற்றினார். இந்த விழாவில் மத்திய ரயில்வே, தகவல்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சமிர் ஜெயின் உரை

இந்த விழாவில் பேசிய சமிர் ஜெயின், மீடியாக்களின் செயல்பாடுகள், இலக்கியங்களின் முக்கியத்துவம், வருங்கால தலைமுறையின் கற்றல், ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதனை பலரும் வெகுவாக பாராட்டினர். தனது பேச்சிற்கு இடையில் சில நகைச்சுவை துணுக்குகளையும் முன்வைத்து அரங்கத்தை கலகலப்பாக மாற்றினார்.

மீடியாக்களின் பங்கு

சமிர் ஜெயின் பேசுகையில், டைம்ஸ் குழுமத்தில் நான் சேர்ந்த போது மீடியாக்களை ’Watchdog’ என்று பத்திரிகையாளர்கள் பேசுவதை கேட்டிருக்கிறேன். நாய் மனிதர்களின் சிறந்த நண்பன். எனவே அந்த வார்த்தை நல்ல வார்த்தை தான். ஆனால் குரைக்கும் நாயாக மீடியாக்கள் இருக்கக் கூடாது. நமது வேலை அதுவல்ல. ஒவ்வொரு விஷயத்தையும் எல்லா நேரங்களிலும் விமர்சனம் செய்து கொண்டிருக்கக் கூடாது.

வாசகர்கள் பிணைப்பு

செய்தித்தாள்கள் மற்றும் வாசகர்களுக்கு இடையில் ஒரு பிணைப்பு இருக்க வேண்டும். அது ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும். தற்போது புதிய வார்த்தை பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. அதுதான் WatchGod. அதாவது கடவுளைப் போன்று உயர்ந்தபட்ச இடத்தில் இருந்து கொண்டு எல்லா விஷயங்களையும் மீடியாக்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

மாணவர்களின் கற்றல்

கடவுள் எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பதை போலத் தான் நம்முடைய பங்கும் இருப்பது அவசியம். பள்ளி, கல்லூரிகளின் பாடப்புத்தகங்களில் இயற்பியல், வேதியியல், உயிரியியல் என பல்வேறு பாடங்களை படிக்கிறோம். அவை மிகச்சிறிய கற்றல் மட்டுமே. அதையும் தாண்டி கற்றல் என்பது பரந்து விரிந்து கிடக்கிறது. இவற்றை ஒவ்வொரு தலைமுறையினரும் சரியான முறையில் அடைய வேண்டியது அவசியம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

நம்முடைய இலக்கியங்கள் செய்தித்தாள்கள் மூலம் ஏராளமான வாசகர்களை சென்றடைய வேண்டும். ஏனெனில் எல்லோரும் புத்தகங்கள் படிப்பார்கள் என சொல்லிவிட முடியாது. எனவே தான் டைம்ஸ் ஆஃப் இந்தியா புத்தகங்களை பற்றிய சிறிய அறிமுகங்களை, அதன் உள்ளடக்கத்தை ஒவ்வொருவருக்கும் கொண்டு சேர்த்து வருகிறது என்றார். மேலும் பேசுகையில், இந்த அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் அமர்ந்திருக்கின்றனர்.

தலைசிறந்த இலக்கியங்கள்

இவர்கள் சிறப்பு விஐபிக்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை சார்ந்த துறையின் மிகச்சிறந்த இலக்கியங்களை படிக்க வேண்டும். டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் இதைத்தான் செய்து வருகிறோம். தலைசிறந்த இலக்கியங்களை ஒவ்வொரு மொழியிலும் மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி எடுத்துள்ளோம். ஆன்மீகத்தில் உலகிற்கு முன்னோடியாக இந்தியா விளங்கப் போகிறது. அதில் உங்கள் அனைவரது பங்கும் மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.