நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் சுருக்கு கயிறு வந்துவிடும் போல மிரட்டுகிறார்கள்-கனிமொழி

நாடாளுமன்றமானது மக்களுக்கான கேள்விகளையும் பிரச்சனைகளையும் விவாதிக்கும் இடமாக இல்லாமல், வெறும் பாராட்டு பத்திரங்களை மட்டுமே வாசிக்கும் இடமாக மாறி வருகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி – V.V.D.சிக்னல், சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில், தமிழ் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய விருது வழங்கும் விழா 2020-2021 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தமுஎகச மாநில தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர், எழுத்தாளர் மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினர்.
image
நிகழ்ச்சியில் பங்கேற்று மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி, நாங்கள் நேற்று தான் பாராளுமன்றத்தில் இருந்து தமிழகம் வந்திருக்கின்றோம். பாராளுமன்றம் என்பது மக்களுக்கான கேள்விகளையும், பிரச்சனைகளையும் எழுப்பும் இடமாக இல்லாமல், வெறும் பாராட்டு பத்திரங்களை மட்டுமே படிக்கக் கூடிய இடமாக மாறி இருக்கின்றது. ஒரு பாராளுமன்றம் என்பது, நாடாளுமன்றம் என்பது மக்களுடைய பிரச்சினைகளை, மக்களுக்கு இருக்கக்கூடிய அச்சங்களை, அவர்கள் முன்வைக்கக்கூடிய கேள்விகளை கேட்கக் கூடிய இடமாக இருக்க வேண்டும். கேள்வி நேரங்களில் கூட அப்படிப்பட்ட சூழலை உருவாக்க முடியாத நிலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
image
பிரதமர் அவர்களிடம் தொடர்ந்து ஒவ்வொரு அரசியல் இயக்கமும், கட்சியும், அங்கே இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளும் கேள்விகளை முன்னாள் வைக்கும்பொழுது, அவர்கள் தரக்கூடிய ஒரே பதில் எதிர்க்கட்சிகளை சாடுவது மட்டும் தான். எந்த கேள்விகளுக்கும் பதில் தருவது இல்லை, கேள்வி கேட்டதே தவறு என்று கேள்வி கேட்டவர்களை எல்லாம் குறைத்து பேசுவது, நையாண்டி செய்வது, மிரட்டுவது அச்சுறுத்துவது போன்ற சூழலை தான் நாம் நாடாளுமன்றத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
image
ஒரு அமைச்சரிடம் நீங்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் நிலை இப்போது என்னவென்று கேட்டால், அவர் பதிலுக்கு நம்மை அச்சுறுத்துகிறார். சுருக்கு கயிறு உங்கள் கழுத்தை நெறிக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு பதில் சொல்லக்கூடிய அமைச்சர் கூறுகிறார் என்றால், இந்த நாட்டின் ஜனநாயகத்தின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று பேசினார்.
image
இந்த கலை இலக்கிய விருது வழங்கும் விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, வ.உ.சி.கல்லூரி முதல்வர் முனைவர் சொ.வீரபாகு ஆகியோர்  கலந்துகொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.