சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் விக்டோரியா அரங்கு சீரமைப்பு உள்ளிட்ட 42 பணிகளை `சிங்காரச் சென்னை 2.0′ திட்டத்தின் கீழ் மேற்கொள்ள அரசு ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தை செயல்படுத்த 2021-22 நிதியாண்டு பட்ஜெட்டில் முதல்வர் ஸ்டாலின் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்தார்.
இந்த நிதியில், சென்னை மாநகராட்சிப் பகுதியில் புதிதாக11 பூங்கா, 2 விளையாட்டுத் திடல், 10 கடற்பாசிப் பூங்கா, 2 மயானபூமி, 16 பள்ளிக் கட்டிடங்கள் அமைத்தல் மற்றும் புராதன சின்னமான விக்டோரியா அரங்கை சீரமைத்தல் உள்ளிட்ட 42 திட்டப் பணிகளுக்கு ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திட்டப் பணிகளைக் கண்காணிக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களுக்கும் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும், முதியோர், குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலும் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
கூழாங்கற்களுடன் கூடிய 8 வடிவிலான பாதை, யோகா செய்யுமிடம், இருக்கைகள், புதுமையான ஓவியங்களுடன் கூடிய சுவர், கழிப்பறைகளுடன் கூடிய பாதுகாப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்டுள்ளதாக பூங்காக்கள் அமையும். மழைக்கால வெள்ளத்தை தடுக்கவும், நிலத்தடிநீரை சேமிக்கவும் கடற்பாசிபூங்காக்கள் உதவும்.
மயானங்களில் எரிபொருளாக எரிவாயு பயன்படுத்தப்படும். மேலும், அங்கு தியான அறை, குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. விக்டோரியா அரங்கின் தரைத்தளம் சுழல் கண்காட்சி அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. 3 பக்க காட்சியகங்கள், பார்வைக்கூடம் மற்றும் ஒரு அரைவட்டக் காட்சியகம் அமைக்கப்படும்.
அருங்காட்சியகத்தை ஒட்டி தேநீர்கூடம், முதல் தளத்தில் ஓய்வு அறை, முக்கியப் பிரமுகர்களுக்கான கூடம், பல்நோக்குப் பயன்பாட்டுக்கான மண்டபம், இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கப்படும். வெளிப்புற வளாகத்தில் சிறிய பசுமைப் புல்வெளித் தோட்டம், வெளிப்புற அருங்காட்சியகம் மற்றும் செயல்திறன் அரங்கு உருவாக்கப்படும். முகப்பில் ஒளிரூட்டும் வெளிச்சத்துக்கான அமைப்புகள் நிறுவப்பட உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.