கரூர்: கரூர் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற (லோக் அதாலத்) எனும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1843 வழக்குகளில் ரூ.21.36 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது. கரூர் மாவட்டத்தில் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களில் சனிக்கிழமை லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, வாகன விபத்து இழப்பீடு, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக மொத்தம் 3.980 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 1.843 வழக்குகள் தீர்வு காணப்பட்டு மொத்தம் ரூ.21.36 கோடி மதிப்பில் வசூலானது.
கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை சார்பு நீதிபதி கோகுல்முருகன் துவக்கி வைத்தார். இதில் நீதிபதிகள், வழக்குரைஞர் சங்கத்தினர், நீதிமன்ற பணியாளர்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான எம்.பாக்கியம் செய்திருந்தார்.