செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நடைபெற்ற திருமண விழாவில், மணமக்களுக்கு பாரம்பரிய சமையலை நினைவுபடுத்தும் வகையிலும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கடந்த வெள்ளியன்று விறகு, மண் அடுப்பை பரிசாக வழங்கி நண்பர்கள் அசத்தினர்.
செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 10ம் தேதி பூபாலன் என்பவருக்கும் ஹேமலதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இத்திருமண நிகழ்ச்சியில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தமிழக பாரம்பரிய சமையல் முறையை மணமக்களுக்கு நினைவுபடுத்தும் வகையிலும் மண் அடுப்பு மற்றும் விறகு கட்டைகளை நண்பர்கள் திருமண பரிசாக வழங்கி அசத்தினர்.
இதுகுறித்து நண்பர்கள் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் எரிபொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மக்களுக்கு பொருளாதார நெருக்கடி மற்றும் கூடுதல் செலவினங்களால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதை புதிதாக திருமணமான மணமக்கள் அறிந்து, சிக்கனத்தைக் கடைப்பிடித்து, விலைவாசி உயர்வை சமாளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மண் அடுப்பு மற்றும் விறகு கட்டைகளை பரிசளித்தோம் என மகிழ்ச்சி தெரிவித்தனர்.