சென்னை: கொசு ஒழிப்பில் காட்டப்படும் அலட்சியம் தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று வெளியான செய்தியை தொடர்ந்து, மாநகராட்சியின் அனைத்து நிலை பொது சுகாதார அதிகாரிகளுடன் மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர்.
சென்னையில் கடந்த ஒரு மாதமாக கியூலெக்ஸ் வகை கொசுக் கடி தொல்லை அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக,‘இந்து தமிழ் திசை’ நாளிதழில், ‘விதிகளை முறையாக பின்பற்றாமல் மாநகராட்சி அலட்சியம்: கொசுத் தொல்லை அதிகரிப்பால் மக்கள் கடும் அவதி’ என்ற தலைப்பில் நேற்று செய்தி வெளியானது.
அதில் மாநகராட்சி நிர்வாகம் கொசு ஒழிப்பில் செய்யும் தவறுகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த செய்தி எதிரொலியாக, மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பணியாற்றும் பொது சுகாதாரத்துறை மண்டல நல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், 3 வட்டார துணை ஆணையர்களுடனான அவசரக் கூட்டம் நேற்று நடந்தது.
மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆணையர் அறிவுறுத்தலின்படி மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான செய்தியை முழுவதுமாக மேடையில் வாசித்தார்.
அதைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு மேயர், ஆணையர் ஆகியோர் அறிவுறுத்தியதாவது: கொசு அதிக அளவில் உற்பத்தியாகும் இடங்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.இனிவரும் 15 நாட்களில் கொசு ஒழிப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
திங்கள் கிழமையில் இருந்து நாள்தோறும் காலை 5 முதல் 7 மணி வரையும், மாலை 5 முதல் 7 மணி வரையிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். போதிய இடைவெளியில் இருமுறை புகை பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால்களில் தேங்கிஉள்ள நீரை உடனடியாக அகற்ற வேண்டும்.
மழைநீர் வடிகால்களில் கொசு ஒழிப்பு புகைப்பரப்புதல், கொசுப்புழு மருந்து தெளித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீர்வழித்தடங்களில் 10 படகுகள் மூலமாக கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க வேண்டும்.
எண்ணெய் பந்து: நீர்நிலைகளில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிக்க முடியாதஇடங்களில், தேவைப்பட்டால் கொசு ஒழிப்பு எண்ணெய் பந்துமற்றும் கொசு ஒழிப்பு எண்ணெய்நிரப்பப்பட்ட பாட்டில்கள் போன்றஉத்திகளை பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் யாரும் அலட்சியமாக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
இக்கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், நிலைக்குழு தலைவர் (சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, வட்டார துணை ஆணையர்கள் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், எம்.பி.அமித், எம்.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அறிவிக்கப்படாத சிறுநீர் கழிப்பிடங்கள்: கொசு ஒழிப்புப் பணியில் மாநகராட்சி அலட்சியமாக இருந்தது போல, மாநகரின் மையப் பகுதிகளான வாலாஜா சாலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் உள்ள சாலை பகுதி, அண்ணா சாலையில் சாந்தி திரையரங்கம் அருகில், திருவல்லிக்கேணியில் சில பகுதிகள் என பல்வேறு இடங்கள் சுகாதாரமின்றி கிடக்கிறது.
அவை அறிவிக்கப்படாத சிறுநீர் கழிப்பிடங்களாகவும், குப்பை கொட்டும் இடங்களாகவும் மாறி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை தாண்டி செல்லும் நிலை இருப்பதால் பொதுமக்கள் அருவருப்படைகின்றனர். எனவே, இதிலும் மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.