தமிழ்நாடு முழுவதும் 155 வருவாய் வட்டங்களில் நில ஆவணங்களில் 54 லட்சம் வரைபடங்கள் விடுபட்டுள்ளது: தணிக்கை துறை தலைவர் அறிக்கையில் அம்பலம்

கோவை: தமிழ்நாடு முழுவதும் 155 வருவாய் வட்டங்களில் நில ஆவண வரைவாளர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பால், 54 லட்சம் வரைபடங்கள் விடுபட்டு நில உடைமையாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 312 வருவாய் வட்டங்களில் 8,721 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு நில ஆவணங்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு, ‘தமிழ்நிலம்’ என்னும் மென்பொருள் மூலம் பராமரிப்பட்டு வருகிறது. இந்த நில ஆவணங்களை விவசாயிகளும், வீட்டுமனை வாங்கி குடியிருப்பவர்களும், இதர நோக்கங்களுக்கு நிலம் வாங்கி தொழில் செய்பவர்களும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், நில ஆவண கணினி மூலம் பராமரிக்கும் திட்டப்பணியை ஆய்வு செய்த, இந்திய கணக்காய்வு மற்றும் தனிக்கை துறை தலைவரின் அறிக்கையில், பணிகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பல்வேறு குறைபாடுகளும், இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் முக்கிய குறைபாடு ‘அ-பதிவேடு’ எனப்படும் நில உடைமையாளரின் விபரங்கள் அடங்கிய பதிவேட்டில் 54 லட்சம் வரைபடங்கள் விடுபட்டு, 54 லட்சம் நில உடைமையாளர்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு காரணம், நில ஆவண வரைவாளர் பதவி, தமிழ்நாட்டில் உள்ள 312 வருவாய் வட்டங்களில் 157 வட்டங்களில் மட்டுமே உள்ளன. 155 வருவாய் வட்டங்களில் இல்லை. இதனால், வரைபடங்களில் உட்பிரிவு மாறுதல்கள் மேற்கொள்ளப்படாமல் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் கிரையம், பாகப்பிரிவினை பரிவர்த்தனை போன்ற நிலம் தொடர்பான பத்திரப்பதிவுகளை பரிசீலிக்கும்போது, சராசரியாக ஆண்டுக்கு 25 லட்சம் பத்திரப்பதிவுகள் நடைபெறுகின்றன. ஆனால், வருவாய்த்துறையில் ஆண்டுக்கு 15 லட்சம் பத்திரப்பதிவுகள் வருவாய் கணக்குகளில் இடம்பெறாமல் உள்ளது. பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தும் தரமான காகிதத்தில் அச்சிடும் முறை கடைபிடிக்கப்படுவது இல்லை.

கடைசியாக 40 வருடங்களுக்கு முன்பு அதாவது, 1982ல் நில உடைமை பதிவு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது, 4,169 களப்பணியாளர்களும், 1,886 தொழில்நுட்ப பணியாளர்களும் இருந்தனர். அப்போது 4.84 கோடியாக இருந்த மக்கள் தொகை, 2020ல் 7.84 கோடியாக உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக, நிலத்தை பங்கீடு செய்யும் பணி 80 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துவிட்டது. அதற்கு ஏற்ப, நில அளவை பணிகளை மேற்கொள்ள, நில ஆவணங்களை தயார் செய்ய போதுமான பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இவை அனைத்தையும் இந்திய தணிக்கை குழு அறிக்கை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளது.

மேலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட 20 லட்சம் வீட்டுமனைகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை மூலம் கடந்த 30 ஆண்டுகளில் வழங்கப்பட்ட 30 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள், கடந்த 10 ஆண்டுகளில் வழங்கப்பட்ட 26 லட்சத்துக்கும் அதிகமான வீட்டுமனை பட்டாக்கள் தொடர்பான பதிவுகள் நில ஆவணங்களில் ஏற்றப்படாமல் உள்ளன. இதனால், நில ஆவணங்களின் பராமரிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதேபோல், 2000ல் ஆவணங்களை கணினி மயமாக்கும்போது 4 கோடி நத்தம் நில ஆவணங்களை விட்டுவிட்டனர். எனவே தாசில்தார் அலுவலகங்களில் நில ஆவண வரைவாளர்களை போதுமான அளவுக்கு நியமித்து குறைபாடுகளை களைய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2000ல் ஆவணங்களை கணினி மயமாக்கும்போது 4 கோடி நத்தம் நில ஆவணங்களை விட்டுவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.