சென்னை: உயர்ந்த நெறிமுறைகள், ஒழுக்கத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் நிலைநாட்ட வேண்டும் என்று ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வலியுறுத்தினார்.
சென்னையில் வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், மனித மூலதன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ‘அரசு ஊழியர்களுக்கான நிர்வாகத்தில் நெறிமுறைகள் மற்றும் மதிப்புகள்’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அவர் பேசியதாவது: மற்றவர்கள் நமக்கு எதை செய்ய கூடாது என எதிர்பார்க்கிறோமோ, அதை நாமும் மற்றவர்களுக்கு செய்யக் கூடாது. இதுவே ஒழுக்க நெறி. நமது தேசத்தை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் பெரிய பொறுப்பு வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு உள்ளது.
ஆக்கப்பூர்வமான செயல்பாடு: இந்த காரணத்துக்காக, உயர்ந்த நெறிமுறைகள், ஒழுக்கத்தை அவர்கள் நிலைநாட்ட வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்கள் ஆன்மா, மனசாட்சியை கவனித்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் ஆர்.ரவிச்சந்திரன், ‘‘ஒவ்வொருவரும் உடல், மன, ஆன்மிக ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தேசத்தை கட்டியெழுப்புவதில் தங்கள் முழு பங்களிப்பை வழங்க வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் வருமான வரித் துறை அதிகாரிகள், ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற குழந்தைகளுக்கு, உள்ளுணர்வு மேம்பாடு குறித்து ‘வாழும் கலை’ அமைப்பின் தன்னார்வலர்கள் விளக்கினர்.