வீலிங் செய்து சீன் போட்ட இளைஞன்… மாணவி மீது மோதி விபத்து – சிசிடிவி வீடியோ வெளியீடு

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள சாலைகள், நீண்ட சாலைகள் என அதிகம் கவனம் பெறும் இடங்களில் தற்போது, விலை உயர்ந்த பைக்குகளை வீல்லிங், ஸ்டாப்பி, ஸ்கிட் உள்ளிட்ட அடிப்படை சாகசம் முதல் பல வித்தைகளை காட்ட இளைஞர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். 

சமூக வலைதளங்களில் கிடைக்கும் கவனம், சக வயது பெண்களை ஈர்க்க மேலெழுந்து வரும் ஆர்வம் மிகுதி ஆகியவை ஒருபுறம் இருந்தாலும், அதில் கிடைக்கும் திரிலுக்காகவும் இளம் வயதினர் அந்த சாகசங்களை செய்து வருகிறனர். இதில், அவர்களுக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்தானது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நம் அண்டை மாநிலமான கேரளாவில் நிகழந்துள்ளது.  

7 முறை அபராதம்

கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லம்பலம் பகுதியை சார்ந்தவர் நோஃபால். 18 வயது இளைஞரான இவர், அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றி வந்துள்ளார். இதையடுத்து, இவர் மீது கேரள போக்குவரத்து துறை சார்பில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஏழு முறை அபராதம் விதித்து பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், விபத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டிவிட்டு, இவரது பைக் திருவனந்தபுரம் வெஞ்ஞாறு மூடு காவல் நிலையத்தில் இருந்து நோஃபால் கையில் ஒப்படைக்கபட்டுள்ளது.

பைக் கிடைத்த இரண்டு நாட்களில் அதாவது, கடந்த வியாழக்கிழமை (பிப். 9) அன்று கல்லூரி மாணவிகள் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, அவர்கள் முன்பு சாகசம் காட்டுவதற்காக திடீரென பைக் வீல்லிங்கில் ஈடுபட்டுள்ளார். 

ஓட்டுநர் உரிமம் ரத்து

இதில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்று கொண்டிருந்த ஒரு மாணவி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காயம் அடைந்த மாணவி, மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கல்லம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன. வெளியான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து கேரளா போக்குவரத்து துறை அந்த இளைஞரை தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதாகவும் கேரளா போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.