மதுரை: மதுரை மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் பயன்பாடில்லாமல் பராமரிப்பு இல்லாமல் உள்ள படகு குழாமில் ஆண்டு கணக்கில் மழைநீர் தேங்கி பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இந்த படகு குழாமை மழைநீர் சேகரிப்பு இடமாகவோ அல்லது மீண்டும் குழந்தைகளை மகிழ்விக்க படகுகள் விடவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை மாநகராட்சியில் மொத்தம் 202 பூங்காக்கள் உள்ளன. இதில், காந்திமியூசியம் அருகே உள்ள ராஜாஜி பூங்கா, உலக தமிழ் சங்கம் அருகே உள்ள சுற்றுச்சூழல் பூங்கா ஆகிய இரண்டு மட்டும் ஒரளவு பராமரிக்கப்பட்டது. மற்ற அனைத்து பூங்காக்களும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. ஆனால், கரோனாவுக்கு பிறகு ராஜாஜி பூங்காவும், சுற்றுச்சூழல் பூங்காவும் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. ராஜாஜி பூங்காவில் போதிய விளையாட்டு உபகரணங்கள், பராமரிப்பு இல்லாததால் அங்கு பொதுமக்கள், குழந்தைகள் வருகை குறைந்தது.
தற்போது சுற்றுச்சூழல் பூங்காவிலும் மியூசிக்கல் பவுண்ட்டேசன்(இசைநிரூற்று) தவிர வேறு எந்த பொழுதுப்போக்கு அம்சங்களும் இல்லை. அதனால், அங்கும் முன்போல் மாலைநேரத்தில் பொதுமக்கள், குழந்தைகள் வருகை இல்லை. தற்போது பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்வதற்கு மட்டுமே பயனுள்ளதாக சுற்றுச்சூழல் பூங்கா உள்ளது.
அதிகாலை முதல் 10 மணி வரை தினமும் பல ஆயிரம் பேர் சுற்றுச்சூழல் பூங்காவில் நடைப்பயிற்சி செல்கிறார்கள். சுற்றுச்சூழல் பூங்காவில் அடர் வனம், போது மரங்கள், செடி, கொடிகள் அதிகம் உள்ளன. பறவைகள் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அங்கும் இங்குமாக பல்வகை பறவைகள் மரங்களில் ஓடியாடி விளையாடும். அழகும், காற்றில் அசைந்தாடும் மரங்களில் இருக்கும் பறவைகள் இரைச்சல் சத்தமும் ரம்மியமாக காணப்படும். இந்த பூங்காவில் நடைப்பயிற்சி சென்றால் ஏதோ அடர் வனத்திற்கு நடைப்பயிற்சி சென்றது போன்ற புத்துணர்வை தரும். நடைப்பயிற்சி செல்வோர் தியானம் செய்வதற்கு ஒரு தியான இடமும், உடற்பயிற்சி செல்வோருக்கு ஒரு உடற்பயிற்சி அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் நடைப்பயிற்சி செல்ல அதிகாலையில் சுற்றுச்சூழல் பூங்காவிற்கு வருகிறார்கள்.
இந்நிலையில் சுற்றுச்சூழல் பூங்காவில் முறையாக தினமும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படுவதில்லை. மரம், செடி, கொடிகளின் சருகுகள், குப்பைகள் நாள் கணக்கில் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதால் அதற்கு கீழே பாம்புகள் மறைந்து கிடக்கின்றன. அவ்வப்போது நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்களை இந்த பாம்புகள் அச்சுறுத்துகின்றன. மாநகராட்சி ஆணையாளராக சந்தீப் நந்தூரி இருந்தபோது மாநகராட்சி பழைய வாகனங்களில் இருந்து கிடைத்த இரும்பு உதிரிப்பாகங்களை கொண்டு தயார் செய்து பூங்காவில் ஆங்காங்கே வைத்த பார்ப்போரை கவர்ந்த கண்கவர் சிலைகள் தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளன.
அதுபோல், முன்பு படகு குழாமாக செயல்பட்ட பூங்காவின் மையத்தில் உள்ள பிரமாண்ட தண்ணீர் தொட்டி, தற்போது பயன்பாடில்லாமல் உள்ளது. திறந்த வெளியில் சுற்றிலும் தடுப்பு கம்பிகள், மூடி இல்லாமல் உள்ளதால் பூங்கா, மாநகராட்சி வளாகத்தில் பெய்யும் மழைநீர் முழுவதும் இந்த படகு குழாமில் வந்து தேங்குகிறது. இந்த தண்ணீர் ஆண்டு கணக்கில் தேங்கி நிற்பதால் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இந்த தண்ணீரில் இருந்து அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகிறது.
வீடுகளில் தண்ணீரை நாள் கணக்கில் பாத்திரங்களில் தேங்கி வைத்தால் கொசு உற்பத்தியாகும் என தேடிச் சென்று அந்த தண்ணீரை கொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் மாநகராட்சி அதன் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் ஆண்டு கணக்கில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாமல் உள்ளது. இந்த படகு குழாமை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து படகுகள் விடவோ அல்லது மழைநீர் சேகரிப்பு இடமாகவோ இதனை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஏற்கனவே நிறைய தண்ணீர் தேங்கி நின்றது. அந்த தண்ணீர் படிபடியாக அகற்றப்பட்டு வருகிறது. அந்த படகு குழாம்மீது கம்பி வலை போட ஏற்பாடுகள் நடக்கிறது. தனியாருக்கு டெண்டர்விட்டு சுற்றுச்சூழல் பூங்காவில் முன்போல் பொழுதுப்போக்கு அம்சங்கள் ஏற்படுத்தவும நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார்.