மதுரை: அரசாணையில் இடம் பெற்றிருக்கும் கிராமங்களில் ஒரு ஆண்டில் ஒரு முறை தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கூத்தைப்பார் கிராமத்தில் உள்ள பெரிய அங்காடி அம்மன் கோவில் மகா சிவராத்திரி விழாவை ஒட்டி பிப். 19ல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அனுப்பினோம். இதுவரை அனுமதி தரவில்லை. எனவே ஜல்லிக்கட்டு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “மனுதாரர் கிராமத்தில் ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அரசாணைப்படி ஆண்டிற்கு ஒரு கிராமத்தில் ஒரு முறை தான் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும். ஒரு ஆண்டில் 2வது முறையாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 15க்கு ஒத்திவைத்தனர்.