மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாசிக் அருகில் இருக்கும் லாசல்காவ், உகாவ் பகுதிகளுக்கு இடையே இன்று காலையில் ரயில்வே ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அருகில் இருப்பவர்கள்கூட கண்ணுக்குத் தெரியாமல் இருந்தது. அந்நேரம் ரயில்வே மின்சார பராமரிப்பு வாகனம் அங்கு வந்தது. அந்த வாகனம் வருவதை கவனிக்காத ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், அவர்கள்மீது அந்த ரயில்வே வாகனம் மோதியது. இதில் 4 ஊழியர்கள் பலத்த காயமடைந்தனர். விபத்து நடந்ததும் 4 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் 4 பேரும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார்கள். ரயில்வே பராமரிப்பு வாகனம் தவறான வழித்தடத்தில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரயில்வே வாகனத்தை ஓட்டிய ஊழியரை மற்ற ஊழியர்கள் பிடித்து அடித்து உதைத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விபத்து நடந்து மூன்று மணி நேரத்துக்கு மேலாகியும் ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று கூறி, ரயில்வே ஊழியர்கள் லாசல்காவ் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு அவர்கள் மன்மாடிலிருந்து மும்பைக்குச் சென்ற கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயிலை 10 நிமிடங்களுக்கும் மேல் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக இருந்த ரயில்வே வாகன சூப்பர்வைசர், பொறுப்பாளர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக புஷாவல் மண்டல பொதுமேலாளர் ஷம்பு தெரிவித்தார்.