பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்த குழு : கோர்ட் உத்தரவை ஏற்றது மத்திய அரசு| The central government has adopted the panel court order to regulate the stock market

புதுடில்லி,:பங்குச் சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு குழு அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் யோசனையை மத்திய அரசு ஏற்றுள்ளது.

தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்கள் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக, ‘ஹிண்டன்பர்க்’ என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, பங்குச் சந்தைகளில் முறைகேடு நடக்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, ‘பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்கும் விதமாக, பங்குச் சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு குழு அமைக்கலாம்’ என, நீதிபதிகள் யோசனை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான ‘சொலிசிட்டர்’ ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:

பங்குச் சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு குழு அமைக்கலாம் என்ற நீதிமன்றத்தின் யோசனையை ஏற்கிறோம். இதில் மத்திய அரசுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.

அதேநேரத்தில், அந்த குழுவில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதை மத்திய அரசே முடிவு செய்யும். குழு உறுப்பினர்களின் பெயர்களை, ‘சீலிடப்பட்ட’ உறையில் வைத்து அறிக்கையாக தாக்கல் செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.