கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகே ஊத்தங்கால் கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மற்றும் கோவிலில் எழுந்தருளியுள்ள 47 அடி உயர முருகன் சிலைக்கு நாளை மறுநாள் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் நேற்று முன்தினம் பூஜைகள் ஆரம்பமானது. இந்த பூஜையில் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி உதயகுமார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, நேற்று காலை ஐந்து மணிக்கு முதல் கால யகபூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்காலயாக பூஜை மற்றும் தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.
தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால பூஜையும், நாளை நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கால யாக பூஜையும் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியான குடமுழுக்கு விழா நாளை மறுநாள் காலை 10 மணிக்கு முதலில் 47 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகமும், அதைத் தொடர்ந்து, மூலவருக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற உள்ளது.
மேலும், இந்த விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.