தமிழ் முறைப்படி கஜகஸ்தான் பெண் இன்ஜினியரை மணந்த தஞ்சை யோகா ஆசிரியர்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூரை சேர்ந்த மணியன் மகன் பிரபாகரன் (33). டிப்ளமோ யோகா படித்துள்ளார். இவர், கடந்த 10 ஆண்டுகளாக கஜகஸ்தானில் யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பிரபாகரனிடம் யோகா கற்பதற்காக, அதே நாட்டை சேர்ந்த பெண் இன்ஜினியரான அல்பினால் (31) வந்தார். அப்போது பிரபாகரனுக்கும், அல்பினாலுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து, அல்பினாலை திருமணம் செய்து கொள்வதற்கு இருவரின் பெற்றோரிடமும் சம்மதம் கேட்டார்.

சம்மதம் தெரிவித்ததையடுத்து, பிரபாகரன்-அல்பினால் திருமணம் பிரபாகரனின் சொந்த ஊரான மதுக்கூரில் தமிழ் முறைப்படி நேற்று நடந்தது. தமிழில் வேத மந்திரங்கள் முழங்க மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். மணமக்களை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வாழ்த்தினர். இதுகுறித்து அல்பினால் கூறும்போது, எங்கள் நாட்டு கலாசாரத்தை விட தமிழ் கலாசாரமும், இங்குள்ள மக்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை, இயற்கை சார்ந்த அமைப்புகளும் எனக்கு ரொம்பவே பிடித்துள்ளது. தமிழ் கொஞ்சம், கொஞ்சமாக கற்று வருகிறேன். விரைவில் இங்குள்ள மக்களிடம் சகஜமாக தமிழ் பேசி நானும் ஒரு தமிழ் பெண்ணாக ஆகி விடுவேன் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.