புல்வாமா தாக்குதல் நினைவு தினத்தையொட்டி உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம்தேதி ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா பகுதியில் துணை ராணுவப் படையினர் வந்து கொண்டிருந்த பேருந்து மீது ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பின் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் வாகனத்தைக் கொண்டு மோதி தாக்குதல் நடத்தினார்.
40 வீரர்கள் உயிரிழப்பு: இந்த தீவிரவாத தாக்குதலில் பேருந்தில் பயணித்த துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி மசூத் அசாரின் கட்டளைப்படி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது பின்பு விசாரணையில் தெரிய வந்தது. இதற்கு பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது.
4-வது நினைவு தினம்: இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததன் 4-ம் ஆண்டுநினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “புல்வாமாவில் இதே நாளில் நாம் இழந்த நாயகர்களின் நினைவு தினம் இன்று. அவர்களின் மிகப் பெரிய தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவர்களின் துணிவு நாட்டை வலிமையானதாகவும் வளர்ச்சிமிக்கதாகவும் மாற்றும்” என்றார்.
இதேபோல் சிஆர்பிஎஃப் துணை ராணுவம், ராணுவ உயர் அதிகாரிகளும் தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சிஆர்பிஎஃப் சிறப்பு பொது இயக்குநர் தல்ஜித் சிங் சவுத்ரி, ஜம்மு-காஷ்மீர் போலீஸார், ராணுவ உயர் அதிகாரிகள் ஆகியோர் புல்வாமாவில் அமைக்கப் பட்டுள்ள உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பெருமிதம் கொள்கிறோம்: இதுகுறித்து தல்ஜித் சிங் சவுத்ரி கூறும்போது, “புல்வாமா தியாகிகள் தீவிரவாதம் இல்லாத தேசத்துக்காக உழைக்க ராணுவப் படையினரை ஊக்குவிக்கின்றனர். இந்தத் தாக்குதலின்போது எங்கள் 40 துணிச்சலான இதயங்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தன. அவர்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். அவர்களின் தியாகம் நாட்டை தீவிரவாதம் இல்லாத நாடாக மாற்ற நம்மை ஊக்குவிக்கிறது” என்றார்.
15 கார்ப்ஸ் ராணுவப் படைப் பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.எஸ். அவுஜ்லா, காஷ்மீர் போலீஸ் ஏடிஜிபி விஜய்குமார் சிஆர்பிஎஃப் அதிகாரி எம்.எஸ்.பாட்டியா உள்ளிட்டோரும் புல்வாமா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.