புதுடெல்லி: லிவ்-இன் காதலியை டேட்டா கேபிளைக் கொண்டு கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன், அவரது உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்திருந்த கொடூர சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. தலைநகர் டெல்லியின் புறநகரான நஜப்கர் அடுத்த மித்ரான் பகுதியை சேர்ந்தவர் சாஹில் கஹ்லோட் (24). இவர் 2018ம் ஆண்டில், உத்தம் நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் வந்திருந்த அரியானாவை சேர்ந்த நிக்கி யாதவை சந்தித்தார். பின்னர் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் (லிவ்-இன்) ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே சாஹில் கஹ்லோட்டுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வந்தனர். கடந்த 9, 10ம் தேதியில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் நடத்துவதற்காக ஏற்பாடுகள் நடந்துவந்தன.
தனக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பது தொடர்பான தகவலை நிக்கி யாதவுக்கு சாஹில் கஹ்லோட் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த திருமண ஏற்பாட்டை நிக்கியாதவ் எப்படியோ தெரிந்து கொண்டார். அதையடுத்து தனது தாபாவில் இருந்த சாஹில் கஹ்லோட்டிடம் வேறொரு பெண்ணுடனான திருமணம் குறித்து கேட்டார். அதற்கு அவர் சரியான பதிலை கூறாததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தனது காரில் வைத்திருந்த டேட்டா கேபிளைக் கொண்டு நிக்கி யாதவின் கழுத்தை சாஹில் கஹ்லோட் நெரித்தார். அப்போது மூச்சுத் திணறி நிக்கி யாதவ் பலியானார். தனது காதலியை கொன்ற பின்னர், அவரது உடலை அப்புறப்படுத்துவதற்கான யோசனையை மேற்கொண்டார். அதன்படி தாபாவில் இருந்த குளிர்சாதன பெட்டியில் நிக்கி யாதவின் உடலை அடைத்து வைத்துவிட்டு, தனது திருமணத்திற்காக அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. அதையடுத்து தாபா மற்றும் அப்பகுதியில் வசிப்போரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (துவாரகா) விக்ரம் சிங் கூறுகையில், ‘புறநகர் பகுதியில் உள்ள தாபாவில் பெண் ஒருவரின் உடல் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று, அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினோம். விசாரணையில், லிவ்-இன் காதலியை கொன்று, அவரது உடலை குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்த சாஹில் கஹ்லோட் என்பது தெரியவந்தது. அதையடுத்து திருமணமான கோலத்தில் சாஹில் கஹ்லோட்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லியில் லிவ்-இன் வாழ்க்கை வாழ்ந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற சம்பவம் போன்று, தனது லிவ்-இன் காதலியை கொன்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.