மும்பை: மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் ஒப்புதலுடன் பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால் அந்த கட்சி திடீரென முடிவை மாற்றி ஏமாற்றிவிட்டது என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 105, அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு 44 அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸுக்கு 54 இடங்கள் கிடைத்தன.
அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, பாஜக ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இதன்படி கடந்த 2019 நவம்பர் 8-ம் தேதி பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
ஆனால் தேசியவாத காங்கிரஸ் புதிய அரசுக்கு ஆதரவு அளிக்க மறுத்தது. இதன்காரணமாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 2019-ம் ஆண்டில் என்ன நடந்தது என்பது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு தேவேந்திர பட்னாவிஸ் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகிய பிறகு எங்களோடு கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸ் முன்வந்தது. அந்த கட்சியோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். தேசியவாத காங்கிரஸ் தலைவர்சரத் பவாருடனும் ஆலோசித்தோம்.
இதன்படி நான் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றோம். இது ரகசிய நடவடிக்கை கிடையாது. சரத் பவாரின் ஒப்புதலுடன் ஆட்சி அமைத்தோம். ஆனால் தேசியவாத காங்கிரஸ் திடீரென தனது முடிவை மாற்றிவிட்டது. அதன்பிறகு என்ன நடந்தது அனைவருக்கும் தெரியும். நாங்கள் இருமுறை ஏமாற்றப்பட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முற்றிலும் பொய்: இதுகுறித்து சரத் பவார் கூறும்போது, “பட்னாவிஸ் பொய்பேசுவார் என்பதை எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.