லக்னோ, காங்கிரஸ் எம்.பி., ராகுலின் விமானம் வாரணாசியில் தரையிறங்குவதற்கு உத்தர பிரதேச மாநில அரசு அனுமதி மறுத்ததாக, காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டிஉள்ளனர்.
பல்வேறு நிகழ்ச்சி
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
நேற்று முன்தினம் இங்குள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபடுவதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் திட்டமிட்டுஇருந்தார்.
இதற்காக வாரணாசியில் உள்ள லால் பகதுார் சாஸ்திரி விமான நிலையத்தில், ராகுல் பயணிக்கும் விமானத்தை தரையிறக்க, காங்., கட்சியினர் அனுமதி கேட்டிருந்தனர்.
இந்நிலையில், திடீரென விமானம் தரையிறங்க விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டதாக, காங்., கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து, காங்., நிர்வாகி அஜய் ராய் கூறியதாவது:
ராகுலின் விமானத்துக்கு முன் கூட்டியே அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், உ.பி., மாநில அரசு நெருக்கடி கொடுத்ததால், திடீரென அனுமதி மறுத்து விட்டனர்.
ராகுலின் ஒற்றுமை யாத்திரை மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதனால் ராகுலைப் பார்த்து பா.ஜ., பயப்படுகிறது. இதன் காரணமாகவே ராகுலின் விமானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை மறுத்துள்ள விமான நிலைய அதிகாரிகள், ‘ராகுல் பயணம் செய்வதாக இருந்த விமானத்திற்கு சொந்தமான தனியார் விமான நிறுவனம் சார்பில், விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்தது.
நடவடிக்கை
‘இதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுத்தோம். எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் வரவில்லை’ என்றனர்.
‘ராகுல் வாரணாசிக்கு வரவிருந்த அதே நாளில், ஜனாதிபதி திரவுபதி முர்முவும் வாரணாசிக்கு வந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம்’ என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்