திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அருகே மணலிவிளை பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன். இவர் வழக்கறிஞருக்குப் படித்துவிட்டு அப்பகுதியில் ஹார்டுவேர் கடை ஒன்று நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், சிவராமன் நேற்று இரவு வழக்கம் போல் கடையை அடைத்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த இடைச்சிவிளை பகுதியை சேர்ந்த சினிமா சண்டை பயிற்சியாளர் பிரசாந்த் மற்றும் பாளையங்கோட்டையை சேர்ந்த முருகன் உள்ளிட்ட இரண்டு பேரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் பெரிதாகியது. இதில், ஆத்திரமடைந்த அவர்கள் இரும்பு கம்பியால் சிவராமனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிவராமன் அங்கிருந்து தப்பி ஓடி, அங்குள்ள ஒரு மளிகை கடைக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தார். இருப்பினும் அவர்கள் இருவரும் அவரைத் துரத்தியபடிச் சென்றுள்ளனர்.
இதைப்பார்த்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது இரண்டு பேரும் சேர்ந்து சிவராமனை கடைக்குள் புகுந்து வெட்ட முயன்றனர். இதனை பார்த்த போலீஸ்காரர் ஒருவர் அவர்களை தடுக்க முயன்றார்.
இருப்பினும், அவர்கள் சிவராமனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால், அவரது கை மணிக்கட்டு துண்டானது. இதையடுத்து, போலீசார் படுகாயம் அடைந்த சிவராமனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து போலீசார் சிவராமனை வெட்டிய பிரசாந்த் மற்றும் முருகன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சிவராமன் நடத்தி வரும் கடை தொடர்பாக அவர்கள் குடும்பத்தினருக்கும், பிரசாந்த் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த முன் விரோதம் தொடர்பாக நேற்று அவர்கள் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சிவராமனை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. மேலும், போலீசார் பிரசாந்த் மற்றும் முருகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.