ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 238 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் கணினி வழியில் ஒதுக்கீடு செய்யும் பணியை நேற்று முன்தினம் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ஏற்கனவே 882 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு ஈரோடு மாநகராட்சி வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கூடுதலாக 1,100 வாக்குபதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டு, கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார்.
வாக்கு எண்ணிக்கை ஈரோடு அடுத்துள்ள சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணனுண்ணிஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.