சுதந்திரம்ங்கிறது சுயமரியாதையில தொடங்கணும்… அம்மாவுக்கு மகள் எழுதும் மன்னிப்புக் கடிதம்!

அன்புள்ள அம்மா,

என்னாடா இது புதுசா அன்புள்ள, பண்புள்ள-லாம் வருதுன்னு உனக்கு யோசனையா இருக்குமே? பல வருஷமா எனக்குள்ள இருந்த சில சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கத்தாம்மா இந்த லெட்டரே…..

நானும் என்  ஃபிரெண்ட் வித்யாவும் பெண் சுதந்திரம், புரட்சி, சுயமரியாதை, நிதி சுதந்திரம்னு கிடைக்கற இடத்துல எல்லாம் மைக் புடிச்சுப் பேசறோம். நேத்து நான் அவ வீட்டுக்குப் போயிருந்தப்போ, அவ அம்மா வெளிய கிளம்ப ரெடி ஆகிட்டு இருந்தாங்க. வித்யாவோட அப்பா அவங்ககிட்ட ‘சட்டைய அயர்ன் பண்ணியாச்சா?’-ன்னு கேட்டார். வித்யாவோட தம்பி ‘அம்மா…எனக்கு பிரியாணி சமைச்சு வெச்சுட்டியா?’-ன்னு கேட்டான்.  வித்யா ‘அம்மா…என் ஃபிரெண்ட் வந்திருக்கா…காபி போட்டுக்கொடு”-ன்னு சொன்னா. ஆளாளுக்கு இப்படி ஆர்ட்ர் போட்டுட்டு, அவங்கவங்க ஜாலியா டி.வி பார்த்துக்கிட்டும் மொபைலை நோண்டிக்கிட்டும் இருந்தாங்க.

வெளியில பெண் சுதந்திரம் பேசற வித்யா, வீட்டுக்குள்ள அவ அம்மாவுக்கே சுதந்திரம் தர்றதில்லையேன்னு எனக்குத் தோணுச்சு. ‘நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா?-ன்னு என் மனசாட்சி என்னைக் கேட்டுச்சு.

ஆமாம்மா…நானும் வித்யாவோட ரகம்தான். பெண் சுதந்திரம் பேசற நானும், உனக்கும் அந்தச் சுதந்திரம் இருக்குன்னு உணர்ந்ததே இல்ல. எனக்கு இருக்குற சுதந்திரத்தையும், பேச்சு உரிமையையும், ஏனோ அப்பா உனக்கு கொடுக்கறதில்லை. ‘அவ ஏற்கெனவே வேலைக்குப் போயிட்டு வந்து டயர்டா இருக்கா. அவகிட்ட வேலை சொல்லாத’ன்னு அண்ணிக்குப் பரிஞ்சு பேசற அண்ணன்கூட, உன்னைபத்தி யோசிக்கிறது இல்ல.

இப்படி நான், அண்ணன், வித்யா மட்டுமில்லாம எங்க தலைமுறையே, பெண் சுதந்திரம்னா அது எங்களுக்கு மட்டும்தான்னு நினைக்கிறோம்.  எங்க அம்மாக்களுக்கும் அந்தச் சுதந்திரம் இருக்குன்னு  நாங்க யோசிச்சதுகூட இல்ல. இன்னும் தெளிவா சொல்லணும்னா, ‘எங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி’னு இருந்துட்டோம்.

ஆடிக்கு ஒரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவைனு ‘பிரியாணி செய்யறேன், புலாவ் பண்றேன்னு’ கிச்சனுக்குள்ள நுழைவேன். காரம் தூக்கலாவும், உப்பு குறைச்சலாவும் எதையாவது ஏடாகூடமாக எதையாச்சும் செய்வேன். அதைச் சாப்பிடறப்போ, ‘இது ஃபர்ஸ்ட் டைம்தானே…மிளகாய்த் தூள் துக்கலா இருந்தாலும் டேஸ்ட் நல்லாத்தான் இருக்கு’-ன்னு  பெருமைபட்டுக்குவேன். `ஆமா, அடுத்த தடவ பிக்கப் பண்ணிடுவா’-ன்னு அப்பாவும் ரொம்ப சந்தோஷமா சாப்பிடுவாரு. ஆனா நீ எப்பவாவது உப்பு கொஞ்சம் அதிகம் போட்டாலும் அதை எங்களால ஏத்துக்க முடியாம கத்தியிருக்கோம். உன்னைத் திட்டியிருக்கோம்..  எங்களோட குறைய  சிரிச்சு மழுப்புற நாங்க, உன்னோட  குறைய ஊதிப் பெரிசாக்கி குற்றவாளிக் கூண்டுல நிக்க வெச்சிருக்கோம்.

நீ எங்கயாவது வெளிய போகணும்னா, போறதுக்கு முன்னாடி எங்க எல்லாருக்கும் தேவையானத செஞ்சு வெச்சுட்டுப் போகணும். திரும்பி வந்தும் எங்களுக்குத் தேவையானதைச் செய்யணும். கொஞ்சம் லேட் ஆகிட்டாலும் நாங்க கேட்கற கேள்விக்கெல்லாம் நீ பதில் சொல்லணும். ஆனா நாங்க  எப்போ வேணாலும் வெளிய போவோம், எப்ப வேணாலும் வருவோம். நீ ஏதாவது கேள்வி கேட்டாலும், “உனக்கு வேற வேலையே இல்லையா?”-னு கேட்டுட்டுப் போயிடுவோம். இவ்ளோ ஏன்? நீ அக்கம்பக்கத்துல யார்கிட்ட பேசணும்ங்கறதகூட நாங்க தான் முடிவு பண்றோம். 

ஒரு நாள் ஆசையா உன்னோட புது ஆண்ட்ராய்டு போன்ல எப்படி டிபி வெக்கறதுன்னு நீ கேட்ட…. நானும் “இது நமக்குத் தேவையா கோபி?’-ங்கற கமென்ட்டோட உனக்கு சொல்லித் தந்தேன். அடுத்த பத்து நிமிஷத்துல, உன்னோட டிபி-ல நானும் அண்ணனும் சிரிச்சுட்டு இருந்தோம். ‘எதுக்கு இந்த போட்டோலாம் டிபி-ல வெக்கற’-ன்னு நானும் அண்ணனும் உங்கிட்ட சண்ட போட்டோமே தவிர, உன்னோட அந்தச் சின்ன ஆசையக்கூட நாங்க மதிக்கல.

இன்னொரு நாள் நீ யார்கிட்டயோ போன்ல பேசிட்டு இருக்கும்போது,  இங்கிலீஷ்ல ஏதோ பேசினே…. உடனே ‘பார்றா’-ன்னு மொத்தக் குடும்பமும் சிரிச்சோம். எல்.கே.ஜி-ல இருந்து இங்கிலீஷ் மீடியம்ல படிச்ச எனக்கும், அண்ணனுக்கும் இன்னமும் கிராமர் மிஸ்டேக் இல்லாம பேசத் தெரியாதுங்கறத மறந்துதான் நாங்க சிரிச்சோம். மனுஷனா பிறந்த எல்லாருக்குமே பாராட்டு பிடிக்கும். உன்னோட இந்தச் சின்ன முயற்சிக்கு, உன்ன நாங்க தட்டிக் கொடுக்காம, முட்டாள்தனமா சிரிச்சுட்டு இருந்தோம்.  

கல்யாணத்துக்கு அப்புறம், “என்னோட கணவரும் என்கூட வீட்டு வேலை செய்யனும், நான் வேலைக்குப் போவேன்…யாரும் என்னை கேள்வி கேட்கக்கூடாது, எனக்கு என்னோட சுயமரியாதை ரொம்ப முக்கியம்…” – இப்படி ஏகப்பட்ட கண்டிஷன் போடற நான், நம்ம வீட்டு வேலைகளை உன்னோட பகிர்ந்துக்கணும்னு ஒருநாள் கூட யோசிச்சது இல்ல.

லேசா  தலைவலி வந்தாலே, அம்மா…காபி போட்டுக்கொடு, அப்பா…வரும்போது மாத்திரை வாங்கிட்டு வாங்க-ன்னு அதிகாரம் பண்ற  நான், தினமும் மூட்டுவலியோட வேலை செய்யுற உனக்கு ஒருநாள் தைலம்கூட  தேய்ச்சுவிட்டது இல்ல…. ரொம்ப வலிக்குதாம்மான்னு கேட்டதுகூட இல்ல…

என்னைக்காவது ஒரு நாள், நீ உனக்கு பிடிச்சத சமைச்சிட்டாலும், ‘எதுக்கு இதை சமைச்ச….இது எனக்குப் பிடிக்காது-ன்னு தெரியும்ல’னு ஆளாளுக்கு சத்தம் போட்டிருக்கோம். வாட்ஸ்அப் டி.பி வைக்கிறதுலேருந்து சமையல், இங்கிலீஷ் பேசுறதுன்னு எல்லா விஷயத்துலயும்  அம்மாங்கிறவ நாங்க சொல்றதத்தான்  செய்யணும், நாங்க  விரும்புற மாதிரிதான் இருக்கணும்னு ரொம்ப சுயநலமாவே இருந்திருக்கோம். நீ காயப்படுவேன்னு தெரியாம கிண்டல் பண்ணி, சிரிச்சிருக்கோம்

என்னோட சுதந்திரத்தை நானே பார்த்துப்பேன், எனக்கு யாரும் அதைத் தரத் தேவையில்லைன்னு வீட்டுக்குள்ளயும், ‘உங்க சுதந்திரத்தை எதுக்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதீங்க…  அதை உங்களுக்கு யாரும் கொடுக்கணும்னு எதிர்பார்க்காதீங்கன்னு மேடையிலயும் முழங்கற நான், என் வீட்டுக்குள்ள, என் அம்மாவுக்கான சுதந்திரத்தை இத்தனை காலமா நானே பறிச்சிட்டிருந்திருக்கேன்னு நினைக்கிறபோது அவமானமா இருக்கும்மா….  

பெண் சுதந்திரம்ங்கிறது அவளோட சுயமரியாதையிலேருந்து தொடங்குதுன்னு இப்ப புரியுதும்மா… இனிமே உன்னோட சுயமரியாதை பாதிக்கிற மாதிரி நடந்துக்க மாட்டேன், உன் சுதந்திரமும்….

Sorryமா… லவ் யூமா!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.