கண்கள் சிவக்கும் ஸ்டாலின் – கோட்டைக்கு பறந்த புகார்: அமைச்சர் பெயரை சொல்லி வசூல் வேட்டை!

அரசு இயந்திரம் எந்த இடத்திலும் வேகத்தை குறைக்க கூடாது; மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் சுணக்கம் இருக்க கூடாது என அமைச்சரவையில் உள்ளவர்களிடம் அடிக்கடி முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். கோட்டையில் நடைபெறும் துறை ரீதியான ஆய்வுக்கூட்டங்களில் அதிகாரிகளிடமும் இதை கூறிவருகிறார்.

நேர்மையான நிர்வாகத்தை வழங்கினால் மட்டுமே மக்கள் நம் பக்கம் நிற்பார்கள் என்பதை தொடர்ந்து அவர் வலியுறுத்தி வரும் போதும் கீழ் மட்டத்தில் பல இடங்களில் வசூல் வேட்டை நடப்பதாக சொல்கிறார்கள்.

ஸ்டாலின் அமைச்சரவையை அமைக்கும் போது ஒவ்வொரு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சர் பொறுப்புகளை பிரித்துக் கொடுத்தார். சில மாவட்டங்களிலிருந்து ஒருவரைக் கூட அமைச்சராக்கவில்லையே என்ற புலம்பல்களும் அப்போது கேட்டன. அந்த வகையில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.

தலைமையின் குடும்ப உறுப்பினரின் ஆதரவாளராக அறியப்படும் அந்த அமைச்சரின் துறையில் தான் புகார் ஒன்று எழுந்துள்ளது. அமைச்சரின் அலுவலகத்தில் உதவியாளராக இருப்பவர் (OA) அமைச்சர் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தான் அமைச்சரின் பி.ஏ (PA) என்று கூறி பலரிடம் அந்த நபர் கறந்துள்ளதாக சொல்கிறார்கள். இது அமைச்சர் தரப்புக்கு தெரிய வந்த போதும் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையாம். நாம் கை வைத்தால் சிக்கல் வரும் என்றும் புகாரை மேலிடத்துக்கு பாஸ் செய்தால் அவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும் என்று காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்

அலுவலக உதவியாளர் மீது கூட நடவடிக்கை எடுக்க அமைச்சர் பயப்படுகிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து விசாரிக்கையில் இத்தனை மாதங்கள் கூடவே இருந்துள்ள அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்தால் நமக்கு எதிராக அவர் திரும்பிவிடக்கூடும் என அமைச்சர் தரப்பு கருதுகிறதாம். இந்த தகவலும் கோட்டை வரை சென்றுள்ளதாக சொல்கிறார்கள்.

முதல்வர் தரப்பு உதவியாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப் போகிறதா, அமைச்சருக்கும் ஏதேனும் அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.